/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமங்கலத்தில் இருந்து தென்மாவட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
/
திருமங்கலத்தில் இருந்து தென்மாவட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
திருமங்கலத்தில் இருந்து தென்மாவட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
திருமங்கலத்தில் இருந்து தென்மாவட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 29, 2024 03:58 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பஸ்களில் 50 சதவீத பஸ்களை திருமங்கலத்தில் இருந்து புறப்படும் வகையில் இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென் மாவட்டங்களான நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் தங்கள் தொழில், கல்வி, வேலை வாய்ப்பு, திருமண சம்பந்தம் தொடர்பாக தினமும் மதுரை வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் திருமங்கலத்தில் இறங்கி பெரியார், ஆரப்பாளையம், புதூர், தபால் தந்தி நகர் உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மூலம் மதுரை நகருக்குள் பயணிக்கின்றனர். தங்கள் வேலை முடிந்து மீண்டும் திருமங்கலம் வந்து சொந்த ஊர் திரும்புகின்றனர்.
இதற்காக மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்களை நம்பி திருமங்கலம் மெயின் ரோட்டில் பயணிகள் காத்திருக்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் மாட்டுத்தாவணியிலேயே பஸ்கள் நிரம்பி விடுவதால் திருமங்கலத்தில் பயணிகள் பஸ்களில் இடம் பிடிக்க போட்டி போடுகின்றனர். இதனால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
அதிலும் தினமும் காலை, மாலை வேலை நேரங்களிலும், தொடர் விடுமுறை, வார விடுமுறை நாட்களிலும் திருமங்கலத்தில் தென் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, பாபநாசம், செங்கோட்டை, சங்கரன்கோவில் ராஜபாளையம், சிவகாசி நகரங்களில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் பஸ்களில் பாதியளவு பஸ்களை திருமங்கலத்தில் இருந்து புறப்படும் வகையில் இயக்கினால் தென்மாவட்ட மக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க முடியும். இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் டோல்கேட் கட்டணங்கள் குறையும். டீசல் விரயம் தவிர்க்கப்பட்டு தினமும் பல்லாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படாது.
எனவே, திருமங்கலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் புறப்படும் வகையில் இயக்க மதுரை, திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

