/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தரைமட்டமான அறை
/
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தரைமட்டமான அறை
ADDED : டிச 18, 2024 02:39 AM

சாத்துார்,:விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஏழாயிரம்பண்ணை அடுத்த செவல்பட்டியில் நேற்று மதியம் 3:30 மணிக்கு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை தரை மட்டமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பசாமி 37. இவருக்கு செவல்பட்டி துலுக்கன்குறிச்சியில் ஜெய் கருப்பா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 20 அறைகள் உள்ளன. தரைச்சக்கரம் புஸ்வானம் உள்ளிட்ட வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று 50 பேர் பணிக்கு வந்திருந்தனர்.
மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். மதியம் 3:30 மணிக்கு சல்பர் அறையில் இருந்து புகை வரத் தொடங்கியது. இதை கவனித்த தொழிலாளர்கள் தப்பி ஓடினர்.
இதையடுத்து வெடி விபத்து ஏற்பட்டது. சல்பர் அறை முற்றிலும் தரைமட்டமானது. அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் தீ பரவியது.
வெம்பக்கோட்டை, ஏழயிரம்பண்ணை தீயணைப்பு மீட்பு படையினர் தீயை அணைத்தனர். மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கி உள்ளார்களா எனவும் தேடினார்கள்.
கற்கள் வெடித்து சிதறியதில் ஆலையின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரு கார்கள் சேதம் அடைந்தன. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.