/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
70 சதவீத முன்னுரிமையில் கூட்டுறவு சங்கங்களுக்கு உரங்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
/
70 சதவீத முன்னுரிமையில் கூட்டுறவு சங்கங்களுக்கு உரங்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
70 சதவீத முன்னுரிமையில் கூட்டுறவு சங்கங்களுக்கு உரங்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
70 சதவீத முன்னுரிமையில் கூட்டுறவு சங்கங்களுக்கு உரங்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 20, 2025 03:37 AM

விருதுநகர்: தட்டுப்பாட்டை போக்க உரம் வந்தால் 70 சதவீத முன்னுரிமையில் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும், என விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன், வேளாண் இணை இயக்குனர் சுமதி, தோட்டக்கலைத்துணை இயக்குனர் சுபா வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் ராமச்சந்திரராஜா, ராஜபாளையம்: உரத்தட்டுப்பாடு உள்ளது. உரம் கொண்டு வரும் போது, 70 சதவீதம் முன்னுரிமை அளித்து வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். தனியாரிடம் வழங்கினால் இணை பொருளை வாங்க வற்புறுத்துவர். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் சர்க்கரை துறையினர் கரும்பு விவசாயிகளுக்கு மானியங்களை அறிவித்துள்ளனர். தரணி சர்க்கரை ஆலை இன்னும் பணத்தை தரவில்லை. அதை பெற்று தர வேண்டும். காட்டுப்பன்றி கட்டுப்படுத்தும் மாவட்டக் குழுவில் விவசாயிகளை இணைக்க வேண்டும்.
செந்தில்குமார், கூட்டுறவுத்துறை அதிகாரி: தற்போது யூரியா 206 டன் இருப்பு உள்ளது. செப். 24ல் 400 டன் யூரியா வரவுள்ளது.
அம்மையப்பன், சேத்துார்: கூட்டுறவு கடனுக்கு இன்னும் சில சங்கங்கள் சிபில் ஸ்கோர் செய்ய வேண்டும்.
சிவசாமி, காரியாபட்டி: ஒரு காலத்தில் விருதுநகர், கோவில்பட்டி பகுதிகள் வெண்ணிற பூமி என அழைக்கப்பட்டதற்கு பருத்தி அதிகம் சாகுபடி செய்யப்பட்டதே காரணம். இத்தகைய சூழலில் தற்போது விலையின்றி விவசாயிகள் வேதனை அனுபவிக்கின்றனர். எனவே மாநில அரசு பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க முன்வர வேண்டும்.
ஞானகுரு, ஸ்ரீவில்லிபுத்துார்: மம்சாபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் ரோடு மோசமான நிலையில் உள்ளது. புதிய ரோடு போட முன்வர வேண்டும்.
தமிழ்செல்வன், சாத்துார்: வெங்கடாசலபுரத்தில் உலர்களம் வேண்டும்.
மச்சேஸ்வரன், நரிக்குடி: திருச்சுழி அ.முக்குளத்தில் கடந்தாண்டு இன்சூரன்ஸ் பணம் செலுத்திய யாருக்குமே இழப்பீடு வரவில்லை. ஏன் இன்சூரன்ஸ் செலுத்துகிறோம் என்றே தெரியவில்லை. அரசு எங்களை நஷ்டப்படுத்துகிறது.
சுப்பாராஜ், பயிர்க்காப்பீடு அலுவலர், வேளாண்துறை: ஐந்தாண்டு சராசரி அடிப்படையில் சாகுபடி குறைந்த பகுதியில் பயிர் சேதம் ஏற்படும் போது இழப்பீடு வழங்கப்படுகிறது.
ராம்பாண்டியன், அருப்புக்கோட்டை: திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை போன்ற மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கென புகார், கோரிக்கை அளிக்க வனத்துறை அலுவலகம் வேண்டும். தெற்காறு குறுக்கே மந்திரி ஓடையில் தடுப்பணை வேண்டும்.
ராஜேந்திரன், விருதுநகர்: சின்னப்பரெட்டியபட்டி, வெள்ளூர் கண்மாய்களின் மதகுகள் புதர்மண்டி கிடக்கின்றன. இதை மழைக்காலத்திற்குள் துார்வாரினால் அப்பகுதி மக்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.