/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலையூர் - கம்பிக்குடி நீட்டிப்பு திட்டத்தில் விடுபட்ட கண்மாய்களை இணைக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
/
நிலையூர் - கம்பிக்குடி நீட்டிப்பு திட்டத்தில் விடுபட்ட கண்மாய்களை இணைக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நிலையூர் - கம்பிக்குடி நீட்டிப்பு திட்டத்தில் விடுபட்ட கண்மாய்களை இணைக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நிலையூர் - கம்பிக்குடி நீட்டிப்பு திட்டத்தில் விடுபட்ட கண்மாய்களை இணைக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2024 05:08 AM

விருதுநகர்: நிலையூர் - கம்பிக்குடி நீட்டிப்பு திட்டத்தில் விடுபட்ட முஷ்டக்குறிச்சி, மேலக்கள்ளங்குளம், வி.நாங்கூர், திம்மாபுரம், டி.வேப்பங்குளம் வருவாய் கிராம கண்மாய்களை இணைத்திட வேண்டும், என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் விஜயா, நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
பெருமாள்ராஜ், விருதுநகர்: சிறுதானியத்திற்கு உழவு மானியம் வேண்டும். கிராமத்திற்கு ஓரிருவருக்கு என்று கொடுக்காமல் நிறைய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். தாதம்பட்டி கண்மாய் கருவேலம் அடர்ந்து காணப்படுகிறது. அதை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்.
அம்மையப்பன், சேத்துார்: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில் சில கடைகள் விதை நெல்லை சான்று பெற்று விற்பதில்லை. இதை வேளாண் துறையின் விதை ஆய்வு துறை கண்காணிக்க வேண்டும்.
வனஜா, விதை ஆய்வு துணை இயக்குனர்: இந்தாண்டு இதுவரை 1679 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் நெல் மாதிரிகள் 230. தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ரசீது தராத 2 கடைகள் மீது உரிமம் ரத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கர்ணன், ஸ்ரீவில்லிபுத்துார்: வேளாண் அலுவலர்கள் களத்திற்கு ஆய்வு வருவதே கிடையாது.
ஜெயசீலன், கலெக்டர்: வேளாண் அலுவலர்கள் களத்திற்கு ஆய்வு செல்கின்றனரா என வட்டார உதவி இயக்குனர்கள் ஆய்வு செய்வதில்லையா. இதை இணை இயக்குனர் கண்காணிக்க வேண்டும்.
விஜயமுருகன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம்: இயந்திரங்கள் கண்காட்சியில் தான் உள்ளன. களப்பணியில் இல்லை. தென்னை மரம் ஏற ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இயந்திரங்களை முழு நேர பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருச்சுழியில் உணவு பூங்கா அமைக்க விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நில எடுப்பு செய்ய கூடாது.
முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: கிராமப்புறங்களில் தனியார் தான் அதிகம் பால் கொள்முதல் செய்கிறது. ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்வதே இல்லை. இப்போது கூட கூட்டத்திற்கு ஆவின் சார்பில் யாரும் வரவில்லை.
மாயமடை, திருச்சுழி: நிலையூர் - கம்பிக்குடி நீட்டிப்பு திட்டத்தில் விடுபட்ட முஷ்டக்குறிச்சி, மேலக்கள்ளங்குளம், வி.நாங்கூர், திம்மாபுரம், டி.வேப்பங்குளம் வருவாய் கிராம கண்மாய்களை இணைத்திட வேண்டும்.
சிவசாமி, முடுக்கன்குளம்: அருப்புக்கோட்டையில் மல்லிகை சென்ட் தொழிற்சாலை எப்போது அமைக்கப்படும்.
சுபா வாசுகி, தோட்டக்கலை துணை இயக்குனர்: மல்லிகை விளைச்சலை அதிகப்படுத்தவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலை அமைக்க அரசு கோரிக்கை வைக்கப்படும்.
ஜெயசீலன், கலெக்டர்: அரசுக்கு எழுதுகிறோம்.
ராமச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்கம்: மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள், விலங்குகள் வயல்வெளிக்கு வந்து விடுகின்றன. இதை தடுக்க சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன் மூலம் சூரிய மின்வேலி அமைத்தால் வனவிலங்குகள் உள்ளே வராது. ராஜபாளையத்தில் நாளுக்கு நாள் யானை மனித மோதல் அதிகரித்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்துார் விவசாயி ஒருவர் பொன்னாங்கண்ணி கண்மாயில் ஆக்கிரமிப்பு உள்ளது என புகார் அளித்த போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என பதிலளித்தனர்.
கலெக்டர் ஜெயசீலன்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றாமல் நீதிமன்றம் செல்லும் வரை காத்திருக்கிறீர்கள் அல்லவா என கேள்வி எழுப்பினார்.
அப்போது விவசாயிகள் கைதட்டினர்.
ஞானகுரு, ஸ்ரீவில்லிபுத்துார்: மம்சாபுரம் - செண்பகத்தோப்பு பகவதிபுரம் வரை செல்லும் ரோட்டில் புதிய தார் ரோடு அமைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர்.
லட்சுமண பெருமாள்: திருச்சுழி வடபாளை கண்மாய் நிறைந்துள்ளது. மடை சேதம் காரணமாக உள்ளது விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை.
ராம்பாண்டியன், காவிரி - குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கிகள் விவசாய கடன் வழங்குவதில் தனி நபர் ஜாமின் கேட்பதை கைவிட வேண்டும்.
கணேசன், வாடியூர்: கன்னிசேரி கண்மாயில் சீமை கருவேலம் மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளது. அகற்ற வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.