/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இயந்திர நடவை நாடும் விவசாயிகள்-- ஆட்கள் பற்றாக்குறையால் ஆர்வம்
/
இயந்திர நடவை நாடும் விவசாயிகள்-- ஆட்கள் பற்றாக்குறையால் ஆர்வம்
இயந்திர நடவை நாடும் விவசாயிகள்-- ஆட்கள் பற்றாக்குறையால் ஆர்வம்
இயந்திர நடவை நாடும் விவசாயிகள்-- ஆட்கள் பற்றாக்குறையால் ஆர்வம்
ADDED : நவ 13, 2024 11:43 PM

சேத்துார்; ராஜபாளையம் அருகே சேத்துார், முகவூர், தேவதானம் சுற்றுப் பகுதிகளில் வேலை ஆட்கள் பற்றாக்குறையால் நெல் விவசாயிகள் இயந்திரம் மூலம் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர்வரத்து பகுதிகளை ஒட்டி பல ஆயிரக்கணக்கான எக்டேர் நெல் விவசாயம் நடந்து வருகிறது. நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு பகுதியாக நெல் நடவு பணிகளை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தேவதானம், சாஸ்தா கோயில் ஒட்டிய பகுதிகளில் விவசாய பணிகளை முதலில் தொடங்கியும், சேத்துார், அயன் கொல்லங்கொண்டான், முகவூர், ராஜபாளையம் பகுதி விவசாயிகள் கிணற்று நீர் இருப்பு, கண்மாய் நீர் வரத்தை பொறுத்தும் பணிகளை தாமதித்து தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாய பணிகளுக்கு முன்பு போல் ஆட்கள் கிடைக்காததுடன் கூலியும் அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக இயந்திரம் நடவுக்கு பரவலாக பலரும் மாறி வருகின்றனர்.
இதுகுறித்து கணேசன்: விவசாய பணிகளுக்கு வெளியூர்களில் வாகனம் அனுப்பி ஆட்களை கொண்டு வர வேண்டியுள்ளது. கூலி அதிகம் கொடுத்தாலும் தேவையான நேரத்தில் இதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் நாற்றுகளை காயப் போடவும் முடியாது. பருவம் தவறுவதற்குள் பணிகளை முடிக்க வேண்டியுள்ளதுடன் செலவையும் குறைத்து விரைவாக பணி முடிய வேண்டும் என்பதால் இயந்திர நடவை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டு வருகிறோம். இயந்திர நடவிற்கு ஆட்களின் மூலம் செலவாவதில் பாதி விதைகளே தேவைப்படுகிறது. போதிய விழிப்புணர்வு ஏற்பட்டால் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்.