/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் கட்டுக்கடங்கா நாய்த்தொல்லை அச்சம்; 8 மாதங்களில் 7246 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி
/
மாவட்டத்தில் கட்டுக்கடங்கா நாய்த்தொல்லை அச்சம்; 8 மாதங்களில் 7246 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி
மாவட்டத்தில் கட்டுக்கடங்கா நாய்த்தொல்லை அச்சம்; 8 மாதங்களில் 7246 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி
மாவட்டத்தில் கட்டுக்கடங்கா நாய்த்தொல்லை அச்சம்; 8 மாதங்களில் 7246 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி
ADDED : செப் 28, 2024 04:55 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கட்டுக்கடங்கா நாய்த்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 ஜன. முதல் ஆக., வரை மட்டும் 7246 பேருக்கு நாய் கடியால் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை நாய் தொல்லை தான். கருத்தடை, நாய் வண்டி மூலம் முன்பு இருந்தது போன்ற எவ்வித தடுப்பு பணிகள் இல்லாததால் நாய்கள் அதிகளவில் பெருகிவிட்டன. இதனால் அவை நாட்பட தெருவில் சுற்றி திரிந்து அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை தாக்கி விபத்தை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் வெறிநாயாக மாறி மக்களை கடித்து ரேபிஸ் நோயை பரப்புகின்றன.
இதற்காக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தீவிர முயற்சி செய்வதாக கலெக்டர் ஜெயசீலன் முன்பு ஒரு ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார். கால்நடைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றோடு இணைந்து தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். ஆனால் இன்று வரை அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எதையும் மாவட்ட நிர்வாகம் எடுத்ததாக தெரியவில்லை. இது மாநில அளவிலான முக்கிய பிரச்னையாகவும் உருவெடுத்து வருகிறது.
சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் நகர்களின் பிரதான ரோடுகளில் நாய்கள் அதிகளவில் உள்ளதால் வாகனங்களின் குறுக்கே விழுந்து விபத்தை ஏற்படுத்துவதும் வாகன ஓட்டிகளை துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. தற்போது மழைக்காலம் வரவுள்ளதால் நாய்களின் இனப்பெருக்க காலம் துவங்கும். இன்னும் அதிக குட்டிகள் போட்டால் நாய் தொல்லை இன்னும் பன்மடங்காகும்.
நாய் தொல்லையால் நாய்களை கொல்வதாக கூறுவதல்ல தீர்வு. அவற்றை கருத்தடை செய்து, வெறிநாய்க்கடி ஊசி போட்டு விடுவது தான் தீர்வு. இதன் மூலம் ரேபிஸ் பரவாது, புதிய நாய்களும் பெருகாது. தெரு நாய்களால் ரோட்டில் விபத்து, சிறுவர்கள் வெளியில் நடமாட முடியாத நிலை தான் உள்ளது. மாவட்டத்தில் 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 5065 பேருக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 2181 பேருக்கும் என 7246 பேருக்கு நாய்கடியால் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை. இதை காட்டிலும் தனியார் மருத்துவமனைகள், வெளிமாவட்டங்களில் சென்று சிகிச்சை பெற்றோர் விவரம் அதிகம் உள்ளது. ரேபிஸ் பாதிக்கப்பட்டு இறந்தோரும் உள்ளனர். இது தொடர்பாக அரசு வெளிப்படையாக செயல்படுவதில்லை. மாவட்டத்தில் சத்தமின்றி அதிகரித்து வரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண என்ன செய்யலாம் என மாநில அளவில் கலந்தாலோசித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் தேவையற்ற உயிர்கள் தான் ஏற்படும்.