/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறை
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறை
ADDED : ஆக 14, 2025 11:24 PM
அருப்புக்கோட்டை: காட்டுப்பன்றிகளால் விளை நிலங்கள் தொடர் சேதமடைகின்றன. அவற்றை தடுக்க வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது, என, அருப்புக்கோட்டையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., ரமேஷ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் ராம்பாண்டியன், காவிரி, வைகை, குண்டாறு பாசன சங்க மாவட்ட தலைவர்: அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கண்மாய்களின் மழைநீர் வரத்து ஓடையை தூர்வார வேண்டும். கண்மாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என சென்ற ஆண்டு மனு கொடுத்தோம். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் செய்வதாக எழுத்து மூலமாக உறுதியளித்தனர். ஆனால் இந்த நிதியாண்டில் கூட இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன வசதி தரும் கண்மாய்கள் தண்ணீர் இல்லாமல் உள்ளது. கோவிலாங்குளம் விவசாய ஆராய்ச்சி நிலம் சிப்காட்டுக்கு எடுப்பதை கைவிட வேண்டும்.
கோபாலகிருஷ்ணன், நரிக்குடி: நரிக்குடி பகுதியில் மழை நீர் போதிய அளவு இல்லாததால் திருமால் கால்வாயில் காலதாமதமாக தண்ணீர் திறந்ததால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய முறையில் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு இழப்பீடு பணம் வரவில்லை.
செல்வம், மேலையூர்: கஞ்சம்பட்டி ஓடையை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதற்கான பணிகளும் துவங்கப்பட்டுள்ளது. முறையாகவும், தரமானதாகவும் பணிகள் செய்ய வேண்டும்.
பாலாஜி, புளியம்பட்டி: காட்டுப்பன்றிகள் தனியார் நிலங்களின் வழியாக விவசாய நிலங்களில் ஊடுருவி வருகிறது. வனத்துறை இதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. காட்டுப்பன்றிகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.
அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி தாசில்தார்கள், வனத்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி கூட்டுறவுத்துறை, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.