/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறைவான பணியாளர்களால் சுகாதார சீர்கேடு
/
குறைவான பணியாளர்களால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 07, 2025 03:39 AM

சிவகாசி: ''தனியார் ஒப்பந்த நிறுவனம் குறைவான பணியாளர்களை வைத்து துாய்மை பணியில் ஈடு படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது, என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அ.தி.மு.க., கவுன்சிலர் சாந்தி தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி விவாதம் செய்தார்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணைமேயர் விக்னேஷ் பிரியா, கமி ஷனர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஸ்ரீனிகா, தி.மு.க.,: கூட்டத்தில் 50 தீர்மானங்கள் கொண்டு வந்தால் முழுமை யாக விவாதம் நடத்த முடியும். ஒரே நேரத்தில் 202 தீர்மானங்களை கொண்டு வந்தால் எப்படி விவாதிக்க முடியும். தீர்மானங்கள் அனைத்தையும் முழுமையாக படிக்க வேண்டும்.
மகேஸ்வரி, தி.மு.க.,: மாநகராட்சிக்கு சொந்த மான காய்கறி மார்க் கெட்டில் கடையை புதுப்பிப்பதற்கு அலுவலர் ஒருவர் ரூ. 15 ஆயிரம் லஞ்சமாக கேட்கிறார்.
சேதுராமன், செல்வம், தி.மு.க.,: மாநகராட்சியின் வருவாய்த்துறையில் அதிக மாக ஊழல் நடக்கிறது. எந்த தேவைக்கு வந்தாலும் அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர். மேலும் தனியார் ஒப்பந்ததாரர் குறைவான தூய்மை பணியாளர்களை வைத்து பணிகள் நடப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது, என்றனர்.
கமிஷனர்: அலுவலர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு விசாரித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திரா தேவி, தி.மு.க.,: குடிநீர் இணைப்பு டெபாசிட் கட்டணத்தில் சிவகாசி, திருத்தங்கல் என தனியாக பிரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி கட்டணம் நிர் ணயிக்க வேண்டும்.
சூர்யா, தி.மு.க.: எனது வார்டில் தார் ரோடு அமைத்த சில நாட்களிலேயே பெயர்ந்து விட்டது உடனடியாக சீரமைக்க வேண்டும்.
சேவுகன், தி.மு.க.,: 202 தீர்மானங்களில் எனது 46வது வார்டுக்கு எந்த தீர்மானமும் இல்லை.
தொடர்ந்து ஒரு சில கவுன்சிலர்கள் அதிகாரிகளை மரியாதை இல்லாமல் பேசினர். இது குறித்து கமிஷனர் அதிகாரிகளை அவமரியாதையாக பேசக்கூடாது. அவை மரபு காக்கப்படவில்லை என்றால் அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தை விட்டு வெளியேற நேரிடும், என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நான்கு மணி நேரம்வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுவாக கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் மன்றம் அங்கீகரிக்கலாம் எனக் கூறி முடிக்கப்படும். இந்த முறை தி.மு.க., கவுன்சிலர் ஸ்ரீனிகா அனைத்து தீர்மானங்களையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து 202 தீர்மானங்களை வாசித்து முடிக்க 4 மணி நேரம் ஆனது.
தினமலர் நாளிதழ் செய்தியை
சுட்டிக்காட்டி பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர்
10வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க., கவுன்சிலர் சாந்தி தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி கமிஷனரிடம் கேள்வி எழுப்பினார். அதில், பாண்டியன் நகருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிடங்கில் கழிவு நீர், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதியளித்தார்.

