ADDED : அக் 04, 2025 03:26 AM
விருதுநகர்: மாவட்டத்தில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. தொடர் அனல், கடும்வெப்பம் வீசிய நிலையில் கனமழையால் நகரில் குளிர்ந்த சூழல் நிலவியது.
தமிழகத்தில் நேற்று விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இருப்பினும் காலை முதலே கடும் வெயில் அடித்தது. அனல் காற்று, வெப்பம் காரணமாக மக்கள் நடமாட முடியாது சிரமப்பட்டனர். இந்நிலையில் மாலை 5:00 மணி முதலே கருமேகங்கள் சூழத் துவங்கி, 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. சாத்துார், சிவகாசி சுற்றுக் கிராமங்களில் பலத்த மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்துாரில் மாலை 4:45 மணி முதல் 5:45 மணி வரை பலத்த மழை பெய்தது.ஒரு மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையின் போது கடுமையான மின்னல், இடி சத்தம் கேட்டது.
மாலை நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகர்ப்பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி வடிந்தது. விருதுநகரில் பல பகுதிகளில் பாதாளசாக்கடை அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.