/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முழுமையடையாத டிஜிட்டல் சர்வே பணிகள்; வேளாண் கள ஆய்வு, திட்டங்களில் சுணக்கம்
/
முழுமையடையாத டிஜிட்டல் சர்வே பணிகள்; வேளாண் கள ஆய்வு, திட்டங்களில் சுணக்கம்
முழுமையடையாத டிஜிட்டல் சர்வே பணிகள்; வேளாண் கள ஆய்வு, திட்டங்களில் சுணக்கம்
முழுமையடையாத டிஜிட்டல் சர்வே பணிகள்; வேளாண் கள ஆய்வு, திட்டங்களில் சுணக்கம்
ADDED : ஜன 02, 2025 11:59 PM
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் துவங்கிய டிஜிட்டல் சர்வே பணிகள் இன்னும் முடிவடையாத சூழலில் வேளாண் கள ஆய்வு, திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பரிதவிக்கும் சூழல் உள்ளது.
மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் நவ. 9 முதல் விளைநிலங்களை டிஜிட்டல் சர்வே செய்யும் பணி துவங்கியது.
விளைநிலங்களின் விவரம், பயிர் செய்த படம் ஆகியவற்றை அலைபேசியில் ஜி.பி.எஸ்., மூலம் பதிவேற்றப்படுகிறது. இந்த டிஜிட்டல் பயிர் சர்வே வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், பொறியியல் துறைகளின் தொழில்நுட்பம் சார்ந்த, சாராத அலுவலர்கள் செய்கின்றனர். துவக்கத்தில் மதுரை, தேனி வேளாண் கல்லுாரி மாணவர்கள், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களும் கல்லுாரிகளுக்கு சென்று விட்டதால் தற்போது அலுவலர்கள் தான் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக சர்வே பணி என்பது வருவாய்த்துறையினுடையது. ஆனால் பணி சுமை உள்ளிட்ட காரணங்களால் வி.ஏ.ஓ.,க்கள் வருவாய்த்துறையிடம் சிறப்பு ஊக்கதொகை வழங்க கோரினர். அதை மறுத்ததால் பணிகளை செய்யவில்லை. இதனால் வேளாண்துறையினர் செய்கின்றனர்.
சர்வே பணிக்கு செல்வதால் வட்டார வேளாண் அலுவலகங்கள் காலியாக உள்ளன. இதனால் பயிர்க்கடன், காப்பீடு தொடர்பான தெளிவு பெறவும், புதிய திட்டங்கள், உரம், பூச்சி மருந்து எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கேட்க வரும் போதெல்லாம் வட்டார அலுவலகங்கள் காலியாக இருப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
ஆனால் அதிகாரிகள் தரப்பில் சர்வே பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில்முழுமை அடையும் என்றும் கூறுகின்றனர்.

