/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மா பயிருக்கு இன்சூரன்ஸ் இல்லை, சாய்ந்த மின்கம்பங்கள் குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
/
மா பயிருக்கு இன்சூரன்ஸ் இல்லை, சாய்ந்த மின்கம்பங்கள் குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
மா பயிருக்கு இன்சூரன்ஸ் இல்லை, சாய்ந்த மின்கம்பங்கள் குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
மா பயிருக்கு இன்சூரன்ஸ் இல்லை, சாய்ந்த மின்கம்பங்கள் குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : அக் 19, 2024 04:42 AM

விருதுநகர் : விருதுநகரில் நடந்த குறைதீர் கட்டத்தில் மா பயிருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்றும், விளைநிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன்,மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்தேவராஜன், வேளாண் இணை இயக்குனர் விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி, வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் விஜயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
அம்மையப்பன், சேத்துார்:2023-24ல் எங்கள் பகுதிக்கு நெல் பயிர்க்காப்பீடு தொகை வரவில்லை.
நாச்சியார் அம்மாள், நேர்முக உதவியாளர்: உத்தேசமகசூல் 58 கிலோ என்றால் மாவட்டத்தில் பல பகுதிகளில் அதற்கு அதிகமாகவே விளைச்சல் வந்துள்ளது. குறைவாக வந்துள்ள சாத்துார் நல்லி பிர்காவிற்கு மட்டும் பயிர் காப்பீடு வழங்கப்பட்டுஉள்ளது.
முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: காரியாபட்டியில் வெங்காயம், பருத்தி இழப்பீடு பெற வேண்டும்.
நாச்சியார் அம்மாள், நேர்முக உதவியாளர்: விரைவில் வந்து விடும்.
பாலகணேசன், மம்சாபுரம்: பசுந்தாள் உரத்துக்கான சணப்பை விதை, கொளிஞ்சி விதை மானியத்தில் வழங்கப்படுமா.
விஜயா, இணை இயக்குனர், வேளாண்துறை: மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் அடுத்த ஆண்டில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்கம்: மா பயிருக்கு இன்சூரன்ஸ் இல்லை. பருவநிலை மாற்றத்தால் மூன்று ஆண்டுகளாக காய்க்காமல் உள்ளது. உடனடியாக இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கால்நடை கணக்கெடுப்பு பெயரளவில்தான் நடத்தப்படுகிறது. ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் உள்ள கிடைமாடுகள் கணக்கெடுக்காமல் உள்ளனர்.
ராஜேந்திரன், டி.ஆர்.ஓ.,: மா இன்சூரன்ஸ் குறித்து அரசுக்கு கடிதம் எழுதப்படும்.
விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. 10யானைகள் முகாமிட்டுஉள்ளன. விவசாயிகளையும் தாக்க வருகின்றன.
ஜெயசீலன், கலெக்டர்: அத்தி பீட் பகுதியில் 5.5 கி.மீ.,க்கு அகழி தோண்ட நிதி வரப்பெற்றுள்ளது. இந்த வாரம் துவங்கப்படும்.
சிவசாமி, காரியாபட்டி: டிராகன் பழ சாகுபடிக்கு பயிற்சி அளிக்கப்படுமா. பஞ்சவர்ணம், சப்பட்டை மாம்பழ வகைகளுக்கு புவிசார் குறியீடு வருவது எப்போது.
குருசாமி, காரியாபட்டி: விளைநிலங்களில் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், வயர்கள் கைக்கு எட்டும் நிலையிலும் உள்ளன. இதை சரி செய்ய புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஜெயசீலன், கலெக்டர்: காரியாபட்டி உதவி பொறியாளர் நாளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கணேசன், வாடியூர்: விருதுநகர் ஒன்றியம் சின்னவாடி கண்மாய் கலுங்கு அருகே பட்டா நிலம் உள்ளது. கடந்த முறை ஆய்வு செய்வதாக கூறினீர்கள். ஆனால் வருவாய்த்துறை வரவே இல்லை. மழை பெய்து கண்மாய் நிறைந்தால் ஊருக்குள் தண்ணீர் வந்து விடும்.
பெருமாள், காரியாபட்டி: கஞ்சம்பட்டி கண்மாயை குடிநீர் ஆதாரமாக மாற்றினால் அக்கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே அங்கு பலர் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அழகர்சாமி, திருத்தங்கல்:மழைக்காலம் வந்து விட்டதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் விளைநிலங்களில் அதிகம் இருக்கும். அதற்கு ஏற்றாற் போல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி முறிவு மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.
ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: கொத்தன்குளம் கண்மாயில் கட்டட கழிவு, குப்பை கொட்டுவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கண்மாயின் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
நிறைகுளம், ஸ்ரீவில்லிபுத்துார்: பொன்னாங்கண்ணி கண்மாயில் ஆக்கிரமிப்பு உள்ளது. அகற்ற வேண்டும்.
செல்வம், திருச்சுழி: தெற்குநத்தம் பெரிய கண்மாயில் உள்ள மூன்று மடைகள்சேதமாகி ஊருக்குள் தண்ணீர் வந்தது. தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. மீண்டும் பருவமழை வந்தால் ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

