/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல்லை -- கொல்லம் இடையே ‛மெமு' ரயில் இயக்க வேண்டும் பயணிகள் வேண்டுகோள்
/
நெல்லை -- கொல்லம் இடையே ‛மெமு' ரயில் இயக்க வேண்டும் பயணிகள் வேண்டுகோள்
நெல்லை -- கொல்லம் இடையே ‛மெமு' ரயில் இயக்க வேண்டும் பயணிகள் வேண்டுகோள்
நெல்லை -- கொல்லம் இடையே ‛மெமு' ரயில் இயக்க வேண்டும் பயணிகள் வேண்டுகோள்
ADDED : ஏப் 18, 2025 02:23 AM
விருதுநகர்:திருநெல்வேலி -- கொல்லம் இடையே தென்காசி வழியாக பகல் நேர மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழகம், கேரளத்தை இணைக்கும் முக்கிய ரயில் பாதையாக தென்காசி -- கொல்லம் ரயில் பாதை உள்ளது. மீட்டர்கேஜ் பாதையாக இருந்த போது திருநெல்வேலி -- கொல்லம் இடையே பகலில் 6 பயணிகள் ரயில்கள் இயங்கின. அகல ரயில் பாதையாக மாற்றும் பணி காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
செங்கோட்டை -- புனலுார் இடையே மலைப்பாதை காரணமாக ரயிலின் பின்புறம் 'பேங்கர்ஸ்' எனும் இன்ஜின்கள் இணைத்து இயக்கப்படுகின்றன. இதனால் கூடுதலாக இரண்டு ரயில் லோகோ பைலட்டுகள் தேவைப்படுகின்றனர்.
மீட்டர்கேஜ் காலத்தில் இயங்கிய திருநெல்வேலி -- கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்க இரட்டை இன்ஜின் தேவைப்படுவதால் சிக்கல் உள்ளது. இதற்கு மெமு ரயில்கள் தீர்வாக அமையும். மெமு ரயில்கள் முன்னும் பின்னும் இன்ஜின் கொண்டவை.
லோகோ பைலட் ரயிலின் முன்புற பெட்டியிலும், கார்டு பின்புற பெட்டியிலும் இருப்பர். 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா மெமு ரயிலில் அனைத்து பெட்டிகளுக்கு இடையிலும் பயணிகள் உள்புறமாக சென்றுவர முடியும்.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா கூறியதாவது: செங்கோட்டை -- புனலுார் இடையே தற்போது 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயங்கி வருகின்றன. மெமு ரயில் சோதனை ஓட்டம் நடத்தினால் திருநெல்வேலி -- கொல்லம் இடையே தென்காசி வழியாக ரயில் இயக்க முடியும். கொல்லத்தில் மெமு ரயில்களை பராமரிக்க பணிமனையும் உள்ளது. மதுரை கூடல்நகரிலும் மெமு ரயில்களுக்கான பணிமனை அமைத்து மதுரை -- செங்கோட்டை இடையே மெமு ரயில்களை இயக்கலாம் என்றார்.