/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேங்கும் கழிவு நீர், போக்குவரத்து நெருக்கடி சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்
/
தேங்கும் கழிவு நீர், போக்குவரத்து நெருக்கடி சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்
தேங்கும் கழிவு நீர், போக்குவரத்து நெருக்கடி சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்
தேங்கும் கழிவு நீர், போக்குவரத்து நெருக்கடி சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்
ADDED : ஆக 23, 2025 11:25 PM

காரியாபட்டி: வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் வீதியில் தேங்குவது, பஜாரில் கடைக்காரர்கள் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுவது, இலவச பொது கழிப்பறையை பயன்படுத்துபவர்களிடம் கட்டணம் வசூல் செய்வது என சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சியில் பஜாரில் உள்ள கடைக்காரர்கள் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். விருதுநகர் கல்குறிச்சிக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால் பஜாரில் இட நெருக்கடியால் இரு வாகனங்கள் விலகிச் செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. குறிப்பாக காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர் வேலைக்கு செல்பவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பஜாரை கடந்து செல்ல படாத பாடு படுகின்றனர்.
குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பலரும் தவியாய் தவித்து வருகின்றனர். ஆத்திர அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. வீதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாததால் வீதியில் வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. மேடும் பள்ளமுமாக உள்ளதால் நடந்து செல்பவர்கள் இடறி விழுகின்றனர்.
கட்டணம் வசூலிக்கக் கூடாது
பஜார் அருகே மக்கள் பயன்பாட்டிற்காக இலவச பொது கழிப்பறை கட்டப்பட்டது. சேதமடைந்ததை சமீபத்தில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். தற்போது இதற்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. கட்டணம் கொடுத்து கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
- சுப்புராஜ், தனியார் ஊழியர் .
ஆக்கிரமிப்பால் நெருக்கடி
பஜாரில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கடைக்காரர்கள் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை. பஜாரை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
- உலகநாதன், தனியார் ஊழியர்.
வாறுகால் வசதி வேண்டும்
மெயின் ரோட்டில் இருந்து கழிவுநீர் செல்ல பிரதான வாறுகால் கட்டப்பட்டது. இடையில் 500 மீட்டர் தூரத்திற்கு வாறுகால் கட்டவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வீதியில் தேங்குகிறது. அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை.
- தங்கராஜ், விவசாயி.

