மூதாட்டி பலி
சாத்துார்: சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் மயங்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார்.
துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் தனலட்சுமி,79.ஜன.25ல் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சுவாமி கும்பிடுவதற்காக ரயிலில் சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். இறங்கும் போது மயங்கி விழுந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
சாத்துார்: சாத்துார் அருகே தாயில்பட்டியில்தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி அருகே அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி, 34. 17 வயது சிறுவன் ஆகியோர் கஞ்சா விற்றனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீஸ் விசாரணையில் தாயில்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ், 43. வேல்துரை, 31. சுப்புராஜ் மகன் கருப்பசாமி கஞ்சா விற்பனையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
டெய்லர் பலி
சாத்துார்: சாத்துார் படந்தால் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சரவணன், 32. டெய்லராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மது போதையில் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். அவரது தாய் சங்கரேஸ்வரி ஆட்டோவில் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அங்கு டாக்டர் பரிசோதித்த போது வழியிலேயே அவர் இறந்தது தெரிய வந்தது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தம்பியை குத்திய அண்ணன் கைது
தளவாய்புரம்: தளவாய்புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன்கள் செந்தில் 22, மாரிமுத்து 25, இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். கிடைக்கும் வருவாயில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். இருவரும் நேற்று முன்தினம் ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு ஆத்திரமடைந்த மாரிமுத்து கத்தியால் தம்பி செந்திலை குத்தினார். தளவாய்புரம் போலீசார் அவரை கைது செய்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.