ரயிலில் அடிபட்டு பலி
விருதுநகர்: அடையாளம் தெரியாத 35 வயதுடைய நபர் நேற்று காலை கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் மார்க்கமாக செல்லும் சரக்கு ரயிலில் அடிப்பட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இவரின் வலது கையில் கதிர் என்ற பெயரும், இடது கையில் ரேவதி என்றும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது. உடலை மீட்டு துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளி பஸ் மாயம்
சிவகாசி: சிவகாசி அருகே பேர் நாயக்கன்பட்டியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் உள்ள போலீஸ் செக் போஸ்ட் அருகே நிறுத்துவது வழக்கம். அதேபோல் அக். 27 ல் பஸ்சை டிரைவர் பாண்டியன் நிறுத்திவிட்டு சென்றார்.நேற்று காலை பஸ்சை எடுப்பதற்காக சென்றபோது பஸ்சை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவர் தற்கொலை
சிவகாசி: சிவகாசி ஏ.துலுக்கப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் 47. டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மூத்த மகள் வெளியூரில் படிப்பதில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்றுக்குட்டி திருடியவர் கைது
சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் 32. இவரது வீட்டின் முன்பு தனது கன்று குட்டி, பன்றியை கட்டி வைத்திருந்தார். கன்று குட்டி ஏற்கனவே திருடு போன நிலையில் போஸ் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் 43, பன்றியை துாக்கிச் சென்ற போது அப்பகுதியினர் பிடித்து கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரனையில் ஏற்கனவே கன்று குட்டியையும் திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.---

