/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டும் குழியான ரோடு, கலங்கலாக வரும் குடிநீர்
/
குண்டும் குழியான ரோடு, கலங்கலாக வரும் குடிநீர்
ADDED : பிப் 03, 2024 05:06 AM
சாத்துார் : சாத்துார் அண்ணா நகரில் ஓடையிலிருந்து படை எடுக்கும் விஷ ஜந்துக்களாலும் கலங்கலாக வரும் குடிநீராலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துார் அண்ணா நகரில் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்திற்காகவும் புதிய குடிநீர் திட்டத்திற்காகவும் ரோடுகள் தோண்டப்பட்டதால் பாதை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகிவிடும் நிலையில் இரவு நேரம் நகர் முழுவதும் இருளில் மூழ்கி காணப்படுகிறது. வீடுகளின் வெளிச்சத்திலேயே பொதுமக்கள் நடமாடும் நிலை உள்ளது.
பள்ளம்மேடு தெரியாமல் நடந்து செல்லும் முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நகரில் போதுமான சுகாதார வளாகம் இல்லாத நிலையில் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
அண்ணா நகர் ஓடையில் முள்செடி அதிகளவில் வளர்ந்துள்ளது. இதில் இருந்து விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து அச்சுறுத்தி வருகின்றன.
குறுக்கு தெருக்களில் வாறுகால்களை தள்ள ஆட்கள் வருவதில்லை. குப்பை தொட்டிகள் இல்லாததால் ஓடைகளிலும் சாக்கடையிலும் பொதுமக்கள் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும்.

