/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்களால் பொது மக்கள் பாதிப்பு...: நடவடிக்கை தேவை
/
செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்களால் பொது மக்கள் பாதிப்பு...: நடவடிக்கை தேவை
செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்களால் பொது மக்கள் பாதிப்பு...: நடவடிக்கை தேவை
செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்களால் பொது மக்கள் பாதிப்பு...: நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 26, 2025 11:23 PM

மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்கள் முதல் நகரங்கள் வரையுள்ள கடைகளில் பழங்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் செவ்வாழை விற்பனை மற்ற பழங்களை விட அதிகளவில் விற்பனையாவதால் நாகர்கோவில், கம்பம், சின்னமனூர், குமுளி போன்ற கேரள மலையடிவார நகரங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரங்களான தேவதானம், சேத்துார், ராஜபாளையம், மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் ஆண்டுதோறும் மாம்பழ சாகுபடி அதிகரித்து பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இன்றைய வாழ்க்கை சூழலில் ஏராளமானோர் பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை சாப்பிட துவங்கியுள்ளனர். இதனால் மாவட்டத்தின் ஒவ்வொரு நகரிலும் அதிகாலையில் பல்வேறு மூலிகை பானங்களும், மாலை நேரங்களில் சூப்புகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பல்வேறு வகை வாழைப்பழங்கள், மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு இயற்கை முறையை கடைபிடிப்பதை பெரும்பாலான வியாபாரிகள் தவிர்த்து வருகின்றனர். இதனால் தற்போது சிறிய பழக்கடைகள் முதல் பெரிய பழக்கடை வரை பல்வேறு கடைகளில் பழங்களை பழுக்க வைக்க ரசாயன முறையை கையாளுகின்றனர். இதற்கு பயன்படுத்தும் கார்பைட் கற்களால் பழங்கள் விரைவில் பழுத்து விட்டாலும் அது சாப்பிடுபவர்கள் உடலுக்கு ஒவ்வாமையையும், வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது.
அதிலும் மாம்பழ சீசன் நேரங்களில் சில வியாபாரிகள் விளைச்சலுக்கு முன்பே மாங்காய்களை கொண்டு வந்து குடோன்களில் வைத்து ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான இடங்களில் தற்போது ஸ்பிரே அடித்து பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே இன்றைய வாழ்க்கை சூழலில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாஸ்ட் புட் உணவுகள், அசைவ உணவுகள், செயற்கை குளிர்பானங்களை அடிக்கடி பயன்படுத்துவதால் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் உடலில் அமிலத்தன்மை அதிகரித்து வயிற்றுப்புண், வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் போன்ற உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகி தற்போது தினமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, விற்பனையாளர்களிடம் இயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதை கடைபிடிக்க அறிவுரை கூறவும், அதனையும் மீறி சுயநலத்திற்காக செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது சட்டபூர்வ கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

