/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவக்கல்லுாரியில் சோலார் பேனல்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பொதுப்பணித்துறை அலட்சியம்
/
அரசு மருத்துவக்கல்லுாரியில் சோலார் பேனல்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பொதுப்பணித்துறை அலட்சியம்
அரசு மருத்துவக்கல்லுாரியில் சோலார் பேனல்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பொதுப்பணித்துறை அலட்சியம்
அரசு மருத்துவக்கல்லுாரியில் சோலார் பேனல்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பொதுப்பணித்துறை அலட்சியம்
ADDED : நவ 20, 2025 03:42 AM

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகளை கடந்தும் பொதுப்பணித்துறைஅலட்சியத்தால் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் பாழாகும் நிலை உருவாகியுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன.12ல் திறக்கப்பட்டது. தற்போது மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கல்லுாரியின் முக்கிய தேவையான மின்சாரத்தை கல்லுாரி வளாகத்திலேயே உற்பத்தி செய்வதற்காகவும், மின்சார கட்டணத்தை குறைப்பதற்காகவும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்காக கல்லுாரி கட்டடம், மாணவர், மாணவியர் விடுதிகள், கலையரங்கம், பேராசிரியர் குடியிருப்புகள், நிர்வாக கட்டடம் உள்பட பல இடங்களில் மொட்டை மாடியில் மொத்தம் ஒரு ஏக்கரில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டது. ஆனால் அரசு மருத்துவக்கல்லுாரி திறந்து மூன்று ஆண்டுகளை கடந்தும் இதுவரை சோலார் பேனல்கள் எதுவும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் மின்சார கட்டணம் கல்லுாரி நிர்வாகம் செலுத்தி வருகிறது. சோலார் பேனல்களை எப்போது பயன்பாட்டுக்கு கொண்டுவருவீர்கள் என பொதுப்பணித்துறையிடம் கேட்கும் போது எல்லாம் பணிகளை துவங்கி விடுகிறோம் என்பது மட்டுமே பதிலாக உள்ளது.
பொதுப்பணித்துறையின் மெத்தன போக்கால் கடந்த மூன்று ஆண்டுகளாக சோலார் பேனல்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகும் நிலைக்கு வந்துள்ளது.
மாநில அரசு மருத்துவக்கல்லுாரிக்காக செயல்படுத்திய திட்டம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் ஒவ்வொருவரின் வரிப்பணமும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மின்தடை ஏற்படும் போது மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால் அரசு மருத்துவக்கல்லுாரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் அனைத்து சோலார் பேனல்களையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

