/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கார்பன் சமநிலை செயல் திட்ட அறிக்கை வெளியீடு
/
கார்பன் சமநிலை செயல் திட்ட அறிக்கை வெளியீடு
ADDED : மார் 14, 2024 11:46 PM
விருதுநகர் : விருதுநகரில் 'கார்பன் சமநிலை - ராஜபாளையம்'என்னும் புதிய திட்டத்தை 2041ம் ஆண்டுக்குள் செயல்படுத்துதல் தொடர்பான செயல் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
பசுமை காலநிலை நிறுவனம் சார்பில் ராஜபாளையத்தில் 'கார்பன் சமநிலை - ராஜபாளையம்' என்னும் புதிய திட்டத்தை 2041ம் ஆண்டுக்குள் செயல்படுத்துதல் தொடர்பான செயல் திட்ட அறிக்கையை ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ், காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் நிர்மலா ராஜா ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டார்.
ராஜபாளையத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலையில் பசுமை பரப்பை அதிகரித்து அதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் மின் பயன்பாட்டின் மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு காற்றாலை, சூரிய ஒளியால் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி குறைப்பதற்கான உத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஆற்றல் திறன்வாய்ந்த கட்டுமானங்கள், போக்குவரத்து, நிலையான கழிவு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

