/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்காமல் மெத்தனம்
/
கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்காமல் மெத்தனம்
ADDED : நவ 28, 2024 04:50 AM
நரிக்குடி: விரகனூர் அணைக்கட்டில் தண்ணீர் இருந்தும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை பாதுகாக்க கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறனர்.
நரிக்குடி பகுதியில் கிருதுமால் நதியை நம்பி ஏராளமான ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது.
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கூட பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின் தான் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த நெல் விவசாயம் மெல்ல குறைய துவங்கியது.
தொடர்ந்து நிரந்தர ஆயக்கட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இருந்தாலும் நிரந்தர ஆயக்கட்டுக்கு நடவடிக்கை எடுக்காமல் நரிக்குடி பகுதி விவசாயிகளை வஞ்சித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் நெற்பயிர் பருவத்திற்கு வரும்பொழுது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், அணைக்கட்டில் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் திறந்து விடுவர்.
சென்ற ஆண்டு கூட ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டும் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 46 கண்மாய்களுக்கும், கிருதுமால் நதியில் உள்ள 200 குடிநீர் திட்டங்களுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பயிர்கள் கருகி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விரகனூர் அணைக்கட்டில் தண்ணீர் இருப்பு உள்ளது.
பயிர்களை காப்பாற்ற கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் ஜெயசீலனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடிப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து விவசாயிகள் குமுறுகின்றனர்.