மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம், புதர் மண்டிய ஓடை: அவதியில் அண்ணா நகர் குடியிருப்போர்
மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம், புதர் மண்டிய ஓடை: அவதியில் அண்ணா நகர் குடியிருப்போர்
UPDATED : ஜூன் 16, 2026 07:54 PM
ADDED : ஜூன் 16, 2026 07:02 PM

சாத்துார்:மூடிக்கிடக்கும் பொது சுகாதார வளாகம்,புதர் மண்டிய ஓடையால் அண்ணா நகரில் குடியிருப்போர் அவதியடைந்து வருகின்றனர்.
சாத்துார் அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் வேல்முருகன், செல்வக்குமார், பொன்ராஜ், மாரிக் கண்ணன், சுரேஷ், முனிஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது:
அண்ணாநகரில் மெயின் வாறுகாலில் மண் மேவி உள்ளதால் கழிவு நீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
வாறுகாலில் மண்ணை அள்ளவும், நகரில் துார்ந்து போன நிலையில் உள்ள சிறிய வாறுகால்களை சரி செய்ய வேண்டும்.
படந்தால் தென்றல் நகரில் இருந்து அண்ணா நகர் வழியாக 60 அடி அகலம் உள்ள மழை நீர் ஓடை உள்ளது. கடந்த காலங்களில் இந்த ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அண்ணாநகர் பகுதி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதன் பின்னர் ஓடையின் பக்கவாட்டு சுவரை உயர்த்தி அகலமான வடிகால் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மழை நீர் வடிகாலில் அதிக அளவு முள் செடி புதர் போல வளர்ந்துள்ளது. இதிலிருந்து இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்கின்றன. இரவு நேரத்தில் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.
மேலும் இந்த ஓடையில் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டு ஆங்காங்கே கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. ஓடையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றாமல் விட்டதால்
மழைக்காலத்தில் மழைநீர் முள் செடிகளால் தடுக்கப்பட்டு மீண்டும் நகருக்குள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. அண்ணா நகரில் உள்ள 60 அடி அகல ஓடையை சுத்தம் செய்வதோடு பலவீனமாக உள்ள மழைநீர் வடிகால் சுவற்றையும் சீரமைக்க வேண்டும்.
வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்ட போதும் இன்னும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. பல வீடுகளில் இருந்து கழிவு நீர் ஓடையில் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
அண்ணா நகரில் பெண்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த சுகாதார வளாகம் தற்போது மூடப்பட்டுள்ளது அருகில் உள்ள ஓடை பகுதியை திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சுகாதார வளாகம் அருகில் இருந்து உப்பு தண்ணீர் அடிகுழாயை குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் போது பள்ளம் தோண்டிய ஒப்பந்ததாரர் அகற்றி விட்டார். இந்த உப்பு தண்ணீர் அடி குழாய் மூலம் இந்தப் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றி வந்தனர். தற்போது அடிகுழாய் அகற்றப்பட்டதால் தண்ணீருக்காக கடைக்காரர்கள் அலைந்து திரியும் நிலை உள்ளது. இங்கு மோட்டாருடன் தண்ணீர் தொட்டி அமைத்து தருவதன் மூலம் கடைக்காரர்கள் பயன் பெறுவார்கள்.ஆண்கள் பெண்கள் இருவரும் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.
அண்ணா நகர் வெம்பக்கோட்டை ரோடு முக்கிய சந்திப்பு பகுதி என்பதால் இந்த இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.இந்த ஹை மாஸ் விளக்கு அமைக்கப்பட்டுபல மாதங்கள் ஆன நிலையில் மின் இணைப்பு வழங்காத நிலையில் ஹைமாஸ் விளக்கு எறியாமல் காட்சி பொருளாக உள்ளது. ஹைமாஸ் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கலந்துரையாடினர்.
(சார் படம் தனிதனி பைலாக அனுப்புகிறேன்)
