/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரடு முரடான ரோடு, குடிநீர் தட்டுப்பாடு தியாகி விஸ்வநாததாஸ் நகரில் மக்கள் அவதி
/
கரடு முரடான ரோடு, குடிநீர் தட்டுப்பாடு தியாகி விஸ்வநாததாஸ் நகரில் மக்கள் அவதி
கரடு முரடான ரோடு, குடிநீர் தட்டுப்பாடு தியாகி விஸ்வநாததாஸ் நகரில் மக்கள் அவதி
கரடு முரடான ரோடு, குடிநீர் தட்டுப்பாடு தியாகி விஸ்வநாததாஸ் நகரில் மக்கள் அவதி
ADDED : அக் 16, 2024 04:20 AM

சாத்துார் : கரடு முரடான ரோடு, குடிநீர் தட்டுப்பாடு என பல்வேறு சிரமங்களால் சாத்துார் தியாகி விஸ்வநாத தாஸ் நகர் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தியாகி விஸ்வநாத தாஸ் நகரில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகள் பன்னீர்செல்வம், செல்வி, பானுமதி, சக்தி, பிரியா, பாஸ்கரன், ஜோதி, லட்சுமி ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது:
விருதுநகர் ஒன்றியம் இ.முத்துலிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தியாகி விஸ்வநாததாஸ் நகர் உருவாகி 25 ஆண்டுகள் ஆகிறது.
ரோடு, தெருவிளக்கு வசதி இல்லை. நகருக்கு வரும் மெயின் ரோடு கற்கள் பெயர்ந்து கரடு முரடாக கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது.
நகரில் உப்பு தண்ணீர் குழாய், நல்ல தண்ணீர் குழாய் எதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு உப்புத் தண்ணீர் அடிகுழாய் தற்போது பழுதடைந்து செயல்படாமல் உள்ளது.
தினமலர் செய்தி எதிரொலியால் தெரு விளக்குகள் அமைத்து தரப்பட்டு உள்ளது. இல்லாவிட்டால் இரவு நேரத்தில் கையில் விளக்குடன் நடமாடும் நிலை இருந்தது.
நகரின் மெயின் ரோடு வழியாக லாரி போன்ற கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. சாலை போக்குவரத்துக்கு தக்கபடி ரோடு வசதி இல்லை.
நகரில் குறுக்குத் தெருக்களில் ரோடு வாறுகால் வசதி இல்லை. மழைக்காலத்தில் சகதியில் கால் வைத்து தான் வீடுகளுக்கு செல்கிறோம்.
வீடுகளின் கழிவுநீர் கடத்த வழியின்றி காலி இடத்தில் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி மக்கள் தவிக்கின்றனர். குப்பை தொட்டிகள் இல்லை.
வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. புழக்கத்திற்கு தேவையான உப்பு தண்ணீரையும் குடிப்பதற்கு தேவையான நல்ல தண்ணீரையும் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
மேட்டமலை செல்லும் மினி பஸ் தியாகி விஸ்வநாத தாஸ் நகருக்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் தார் ரோடு அமைத்து தர வேண்டும்.வீட்டு விசேஷங்கள் நடத்த வசதியாக சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும். பயணிகள் நிழற்குடை இல்லாததால் ரோட்டில் வெயிலில் காத்து நின்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.
இங்கு பயணிகள் நிழற்குடை கட்டித் தரவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.