/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சென்னை ரயில்களில் தட்கலில் கூட டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு: உடனடி தேவை சிறப்பு ரயில்
/
சென்னை ரயில்களில் தட்கலில் கூட டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு: உடனடி தேவை சிறப்பு ரயில்
சென்னை ரயில்களில் தட்கலில் கூட டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு: உடனடி தேவை சிறப்பு ரயில்
சென்னை ரயில்களில் தட்கலில் கூட டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு: உடனடி தேவை சிறப்பு ரயில்
UPDATED : நவ 02, 2024 07:27 AM
ADDED : நவ 02, 2024 02:29 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:தீபாவளி முடிந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் தட்கலில் கூட டிக்கெட் கிடைக்காமல் பல ஆயிரம் பயணிகள் தவிக்கின்றனர். இன்றும், நாளையும் (நவ.,2, 3) உடனடி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பல லட்சம் தென் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். தீபாவளி முடிந்த நிலையில் நேற்று முதல் சென்னையை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளனர். 120 நாட்களுக்கு முன்பே வைகை, வந்தே பாரத், குருவாயூர், தேஜஸ், கொல்லம், பாண்டியன், பொதிகை, அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி, முத்து நகர் உட்பட அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அப்போதே ஒவ்வொரு ரயிலிலும் ஸ்லீப்பர், ஏ.சி. பெட்டிகளில் வெயிட்டிங் லிஸ்ட் அதிகமாக இருந்தது.
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விடப்பட்டதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால் மேலும் பல ஆயிரம் தென் மாவட்ட மக்கள் வெயிட்டிங் லிஸ்ட் இருந்த நிலையிலும் டிக்கெட் முன்பதிவு செய்ததால் 'ரெக்ரெட்' நிலை ஏற்பட்டது.
நேற்று தட்கல் முன்பதிவு துவங்கிய நிலையில் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. வைகை, குருவாயூர், பாண்டியன், பொதிகை, அனந்தபுரி, நெல்லை, முத்து நகர் ரயில்களில் தட்கல் டிக்கெட்டுகள் கூட 'ரெக்ரெட்' நிலை ஏற்பட்டது.
இன்று மதுரை வழியாக சென்னை செல்லும் 19 ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருக்கின்றனர். இதே நிலை நாளையும் (நவ., 3) காணப்படுகிறது.
ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதால் பல ஆயிரம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பயணிகள் சென்னை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே இன்றும், நாளையும் ( நவ.,2, 3) நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

