UPDATED : நவ 10, 2026 10:21 AM
ADDED : நவ 10, 2026 10:17 AM
l மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக
l ஜூன் முதல் அக்., வரை மட்டும் 70 பேர் பாதிப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 70 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சிவகாசியில் கடந்த மாதம் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் காலையில் வெயில் மாலையில் மழை, நள்ளிரவில் பனி என காலநிலை தொடர்ந்து மாறி வருவதால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகே மழை நீர் தேங்கி குளம் போல மாறியுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள காலி நிலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நிர்வாகங்கள் எதுவும் செய்யாமல் இருந்ததால் மழை நீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மழை நீர் தேங்கிய காலி நிலங்களில் எண்ணெய் பந்துகளை வீசி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்திருக்க வேண்டும். ஆனால் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளிலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபடவில்லை.
மேலும் நோய் பரவல் ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து சுகாதாரத்துறைக்கு போதிய ஒத்துழைப்பை உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் வழங்காமல் இருப்பதாலும் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
மற்ற மாவட்டங்களை விட அதிக அளவில் டெங்கு பாதிப்பு விருதுநகர் மாவட்டத்தில் அதுவும் சிவகாசியில் பதிவாகி அதிகரித்து வருகிறது. தற்போது பட்டாசுகளை வாங்கி செல்ல வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் வந்து செல்லும் நிலையில் அவர்களும் நோயாளிகளாக மாறும் நிலை உருவாகியுள்ளது.
காரியாபட்டி அச்சங்குளத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் காலி நிலங்களில் தேங்கிய மழை நீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்தது. மேலும் மேல்நிலை குடிநீர் தொட்டியை முறையாக வாரம் ஒரு முறை சுத்தம் செய்யாமல் இருத்தல், வீடுகள், அதனை சுற்றிய மழை நீர் தேங்கும் வகையிலான பொருட்களை அகற்றாமல் இருத்தல் ஆகும்.
எனவே மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் இருந்து நோய்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள், பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
