/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,மலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்
/
ஸ்ரீவி.,மலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : நவ 03, 2024 03:08 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மலை அடிவாரப்பகுதிகளில் யானையைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வனத்துறை எச்சரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான செண்பகத்தோப்பு, பந்த பாறை, அத்தி துண்டு பகுதிகளில் சில வாரங்களாக யானைகள் தோப்புகளுக்குள் புகுந்து மா, தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தின. இதனால் 12 பேர் கொண்ட வனத்துறையின் தனிப்படையினர் மாலை 6:00 முதல் மறுநாள் காலை வரை ரோந்து சுற்றி வருகின்றனர். இருப்பினும் அதனையும் மீறி செண்பகத்தோப்பு மெயின் ரோடு, குறவன் குட்டை பகுதியில் யானைகள் நடமாடுவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பிள்ளையார் நத்தம் ரெங்கர் தீர்த்தம் பகுதி தோப்புக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கட்டி போட்டிருந்த கன்று குட்டியை கடித்துக் கொன்றது. இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஆனால் நேற்று கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகவில்லை. இதனால் மலைப்பகுதிக்குள் சிறுத்தை சென்று விட்டதா அல்லது வேறு எங்கும் பதுங்கி உள்ளதா என வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வனச்சரகர் செல்வமணி கூறுகையில், ''மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறை ஊழியர்கள் இரவு, பகல் கண்காணித்து வருகின்றனர். மாலை நேரங்களில் தேவையின்றி மலையடிவார பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.