/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உரத்துடன் இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது முத்தரப்பு கூட்டத்தில் சப் கலெக்டர் அறிவுறுத்தல்
/
உரத்துடன் இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது முத்தரப்பு கூட்டத்தில் சப் கலெக்டர் அறிவுறுத்தல்
உரத்துடன் இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது முத்தரப்பு கூட்டத்தில் சப் கலெக்டர் அறிவுறுத்தல்
உரத்துடன் இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது முத்தரப்பு கூட்டத்தில் சப் கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : டிச 17, 2025 06:07 AM
சிவகாசி, யூரியா உரத்துடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது. மாறாக நானோ யூரியா , ஆர்கானிக் உரங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கலாம், என விவசாயிகள், வேளாண் அலுவலர்கள், உர நிறுவனங்கள் கலந்து கொண்ட முத்தரப்பு கூட்டத்தில் சப் கலெக்டர் அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் யூரியா உரத்துடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்தனர். யூரியா உரத்துடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது என அறிவுறுத்திய கலெக்டர் சுகபுத்ரா இதுகுறித்து விவசாயிகள், வேளாண் அதிகாரிகள், ஊர விற்பனையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த அறிவுறுத்தினார்.
அதன்படி நேற்று சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சப் கலெக்டர் முகமது இர்பான் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அம்சவேணி, வேளாண் துறை தரக்கட்டுப்பாட்டு அலுவலர் அரிபுத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயிகள் கூறுகையில்: யூரியா உரத்துடன் இணைப்பொருளாக வழங்கப்படும் நானோ யூரியா போதிய பலன் தரவில்லை. மேலும் அடி உரமாக வழங்கும் இயற்கை உரங்களை பயிர் விளையும் நேரத்தில் கொடுப்பதால் பலன் இல்லை. உர நிறுவனங்கள் வழங்கும் நானோ உரம், ஆர்கானிக் இடு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேளாண் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
அரசாணையின்படி விவசாயிகளை கட்டாயப்படுத்தி எந்த பொருட்களையும் வாங்க நிர்பந்திக்க கூடாது. அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், என்றனர்.
உர நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில், நானோ உரங்கள், ஆர்கானிக் இடுபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படியே அரசு சான்று வழங்கி உள்ள நானோ உரங்கள், ஆர்கானிக் இடுபொருட்கள் வழங்கப்படுவதாக கூறினர்.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில்: பயிர்களுக்கு 16 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவை. விவசாயிகள் யூரியாவை மட்டும் அதிகமாக பயன்படுத்தாமல், சமச்சீர் உர மேலாண்மை செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், இயற்கை உரங்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். தனியார் உரக்கடைகளில் எந்த இடுபொருட்களையும் கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.
சப் கலெக்டர் கூறுகையில்: விவசாயிகளை இணை உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. மாறாக நானோ உரங்கள் ,ஆர்கானிக் இடுபொருட்கள் குறித்து வேளாண்துறையுடன் இணைந்து விவசாயிகளுக்கு சோதனை முறையில் வழங்கி, அதன் பலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊக்குவிக்கலாம், என்றார்.

