அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயில் பகுதியை சுற்றி குப்பை கொட்டப்பட்டு சுகாதார கேடாகவும், ரோடு ஓரங்களில் மாட்டுச் சாணம் குவிக்கப்படுவதாலும் மக்கள் துர்நாற்றத்தில் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 32வது வார்டில் உள்ளது பட்டாபிராமர் கோயில் பகுதி. கோயிலை சுற்றி 7க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. திருச்சுழி மெயின் ரோட்டில் இருந்து பட்டாபிராமர் கோயில் செல்லும் மெயின் ரோடு பல பகுதிகளில் பெயர்ந்து கிடங்காக உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் ரோடு போடப்பட்டது பெயர்ந்து விரிசல் கண்டுள்ளது. கோயிலுக்கு டூவீலர்களில் கூட வர முடியாத அளவிற்கு ரோடு உள்ளது. கோயிலுக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இதில் நகராட்சி மூலம் பூங்கா அமைக்க பலமுறை வார்டு கவுன்சிலர் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இங்கு பூங்கா அமைந்தால் சுற்றுப்புறங்களும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். கோயில் வழியாக சங்குமணி தெருவிற்கு செல்லும் ரோடு ஓரங்கள் குப்பை குவிந்தும், மாட்டுச் சாணங்களை குவித்தும் நடக்க முடியாத அளவிற்கு செய்துள்ளனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது.
கோயிலுக்கு அருகில் நகராட்சி பொது கழிப்பறை இருந்தது. அது சேதமடைந்து விட்டதால் புதியதாக கட்டி தரப்படும் என கூறி இடித்து ஆண்டுகளாகியும் கழிப்பறை கட்டப்படவில்லை. இப்பகுதி மக்கள் இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு ரேஷன் கடையும், சமுதாய கூடமும் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துஉள்ளனர்.
தெருக்களில் முறையான வாறுகால் வசதி இல்லை. ரோட்டை உயர்த்தி அகலமாக வாறுகால் கட்ட வேண்டும். கோயில் பின்புறம் உள்ள பிரதான ஓடை வழியாக மழை நீர் பெரிய கண்மாய்க்கு செல்லும். 30 அடி ஓடையாக இருந்தது பராமரிப்பு இன்றி போனதால் ஆக்கிரமிப்பில் 5 அடி ஓடையாக சுருங்கி போனது. ஓடையில் ஒரு ஆள் உயரத்திற்கு மண் மேவி உள்ளது.
ஓடையை தூர்வாரி மண்ணை அப்புறப்படுத்தினால் தான் தங்கு தடை இன்றி மழை நீர் கண்மாய்க்கு செல்ல வசதியாக இருக்கும். கோயில் அருகில் குப்பை கொட்ட கூடாது என நகராட்சியின்சுகாதாரப் பிரிவு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ரேஷன் கடை அவசியம்
பிரபு, தொழிலாளி: பட்டாபிராமர் கோயில் பகுதியில் அரசு நிலங்கள் உள்ளது. இதில் ரேஷன் கடையும், சமுதாய கூடமும் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை இங்கு வந்தால் 2 வார்டு மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். நடவடிக்கை இல்லை.
பூங்கா வேண்டும்
மாணிக்கம், தொழிலாளி: பட்டாபிராமர் கோயில் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி பூங்கா அமைத்தால் 3 வார்டு மக்களுக்கு பொழுதுபோக்க வசதியாக இருக்கும். அத்துடன் கோயில் பகுதி முழுவதும் தூய்மையாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாறுகால் வசதி இல்லை
தாமரைச்செல்வி, குடும்ப தலைவி: பட்டாபிராமர் கோயில் பகுதியில் உள்ள தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வாறுகால்கள் சேதமடைந்து கழிவுநீர் முறையாக செல்லாமலும் உள்ளது. மழைக்காலத்தில் வாறுகால்கள் நிறைந்து மழை நீரும் கழிவு நீரும் கலந்து தெருவில் ஓடுகிறது. இந்த பகுதியில் அகலமாக வாறுகால் அமைத்தும், ரோட்டை உயர்த்தி அமைக்க வேண்டும்.