தெருக்களில் ரோடு சேதம், செயல்படாத சுகாதார வளாகம்:தவிக்கும் தட்டாவூரணி மக்கள்
தெருக்களில் ரோடு சேதம், செயல்படாத சுகாதார வளாகம்:தவிக்கும் தட்டாவூரணி மக்கள்
UPDATED : ஆக 08, 2026 06:29 PM
ADDED : ஆக 08, 2026 06:21 PM

சிவகாசி:தெருக்களில் ரோடு சேதம், செயல்படாத சுகாதார வளாகம் , குடிநீர் பற்றாக்குறை என சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு தட்டாவூரணி பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி தட்டாவூரணி பகுதியில் தெருக்களில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. இங்குள்ள அனைத்து தெருக்களிலுமே ரோடு அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அனைத்து தெருக்களிலும் வாறுகால் துார்வாரவில்லை. இதனால் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு சுகாதார கேட்டையும் ஏற்படுத்துகிறது. மேலும் மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இப்பகுதியில் நடமாடும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தட்டாவூரணியிலிருந்து விளாம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் கொட்டிக் கிடக்கும் மணல்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மெயின் ரோட்டில் வாறுகால் துார்வாரப்படாததால் மழைநீர் முழங்கால் அளவிற்கு ரோட்டில் தேங்கி விடுகின்றது.
சீரான விநியோகம் அவசியம் செல்வி, குடும்பத் தலைவி, இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியம் கட்டப்பட்டது. சமீபத்தில் குழாய் வழியாக புழக்கத்திற்கான தண்ணீர் மட்டும் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டது. குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் மாநகராட்சி வாகனம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்தத் தண்ணீர் அனைவருக்கும் போதவில்லை. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்பாட்டில் இல்லை வேல்முருகன், அச்சுத்தொழிலாளி, இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள இரு சுகாதார வளாகங்களும் சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது வீணாக உள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுகாதார வளாகத்தில் தண்ணீர், மின்சார வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
விபத்து ஏற்படும் நிலை மதுரை வீரன், கட்டட தொழிலாளி, இங்குள்ள அனைத்து தெருக்களிலுமே ரோடு சேதம் அடைந்துள்ளது. இந்த ரோட்டின் வழியாக தினமும் அருகில் உள்ள பள்ளிக்கு டூவீலர்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். மேலும் மாணவர்களும் இதன் வழியாகத்தான் செல்கின்றனர். ஆனால் ரோடு சேதத்தால் மழைக்காலங்களில் நடந்து செல்ல கூட வழியில்லை. டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். உடனடியாக ரோட்டை சீரமைக்க வேண்டும்.
