/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூமி பூஜை போட்டு 2 ஆண்டுகளாகியும் ரோடு போடவில்லை
/
பூமி பூஜை போட்டு 2 ஆண்டுகளாகியும் ரோடு போடவில்லை
ADDED : ஆக 12, 2025 11:27 PM
அருப்புக்கோட்டை,: பாலையம்பட்டி ஊராட்சி கீரை தோட்டம் பகுதியில் ரோடு போடுவதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போட்டதோடு பணி முடிந்து விட்டது என அதிகாரிகள் சென்று விட்டதால் இன்று வரை ரோடு வசதி, வாறுகால் , தெருவிளக்கு வசதிகளின்றி மக்கள் மிகுந்த வேதனைக் குள்ளாகி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீரை தோட்டம் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, உப தலைவர் கிருஷ்ணசாமி, துணைச்செயலாளர் சந்திரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் ராமதாஸ், பவானி, முருகேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:
பாலையம்பட்டி ஊராட்சியை சேர்ந்த கீரை தோட்டம் பகுதியில் 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்தப் பகுதி உருவாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. மெயின் ரோட்டில் இருந்து எங்கள் பகுதிக்கு வரும் ரோடு கரடு முரடாக நடக்க முடியாத நிலைமையில் உள்ளது. இரவு நேரங்களில் வயதானவர்கள் தடுக்கி விழுகின்றனர். தெரு விளக்குகளும் இல்லை.
இருட்டு நேரங்களில் தெருவில் செல்ல பெண்கள் பயப்படுகின்றனர். திருட்டுகள் நடைபெறுவதற்கு ஏதுவாக உள்ளது. எங்கள் பகுதியினர் மின்கம்பத்தில் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்கு மாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை. எங்கள் பகுதி தெருக்களில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது.
மெயின் ரோட்டில் இருந்து கீரை தோட்டம் பகுதி வரை 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு அமைக்க பூமி பூஜை போட்டதோடு சரி எந்த பணியும் நடக்கவில்லை. கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளது. மெயில் ரோட்டில் இருந்து எங்கள் பகுதிக்கு வரும் நுழைவு பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நடக்க முடியாத நிலையில் உள்ளது.
இந்த பகுதியை சரி செய்ய வேண்டும். புறநகர் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டும். ஊராட்சிக்கு தவறாமல் வரிகள் கட்டுகிறோம் ஆனால் வசதிகள் மட்டும் செய்து தர மறுக்கின்றனர். என்றனர்.