/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர்
/
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர்
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர்
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை பூங்காவாக மாற்றிய சப் இன்ஸ்பெக்டர்
ADDED : மார் 21, 2025 05:58 AM

காரியாபட்டி ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 169 ஆண்டுகள் ஆன காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு என தனி வரலாறு உண்டு. வெயில் காலத்திலும் வெட்கை தாக்காது, குளிர்ச்சியான சீதோஷண நிலை தரும் அதன் வடிவமைப்பு. பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் இருந்து வருவது சிறப்பு.
ஆண்டுகள் பல கடந்ததால் என்னவோ கூடுதலாக புதிய கட்டடம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷன் என்றால் தண்டனை வழங்க மட்டும்தான் என்பது நோக்கம் அல்ல. தவறு செய்தவர்களை திருத்தி, மீண்டும் தவறு செய்யாது இருக்க அறிவுரை வழங்குவதை பலர் கொள்கையாக கடைப்பிடித்து பணியாற்றி வருவது சிறப்பு.
போலீஸ் உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் சப்- இன்ஸ்பெக்டர் அசோக் குமார். புகார் கொடுக்க வருபவர்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் உறவினர் வீட்டுக்கு வந்து செல்கின்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக, தான் பணியாற்றக் கூடிய, எந்த போலீஸ் ஸ்டேஷனாக இருந்தாலும் அதனை வேறு விதமாக மாற்றி காட்டுவதில் ஆர்வமுடையவர். அந்த வகையில் அதிக நாட்கள் பணியாற்றிய 2024 ஜூலை 5 அன்று காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை மாவட்டத்தில் முதல் முதலாக ஐ.எஸ். ஓ., தரச் சான்றிதழ் பெறும் அளவிற்கு உயர்த்திக் காட்டிய பெருமை அவருக்கு உண்டு.
பூங்காவாக மாறிய போலீஸ் ஸ்டேஷன்
சுற்றுச் சுவர் இன்றி படுமோசமாக இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சுற்றுச் சுவர் எழுப்பி, பேவர் பிளாக் கற்கள் பதித்து, மூலிகைச் செடிகள், பூ செடிகள் வளர்த்து பூங்காவாக மாற்றினார். புகார் தர வருபவர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தினார். சுற்றுச்சுவர் முழுவதும் உலக பொதுமறையான திருக்குறள், தமிழ் பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடு, குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன், வண்ண ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தி, பார்ப்பவரின் கண்களுக்கு விருந்து படைத்தார்.
நுாலகம்
படித்த இளைஞர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி, அரசு தேர்வுகள் எழுத, படித்து பயன் பெற நூலகத்தை ஏற்படுத்தினார். பணி மட்டுமே கடமை என்று நினைக்காமல், மற்றவர்களுக்கு உதவுவதை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். படிக்க வசதியில்லாதவர்களுக்கு படிப்பு செலவு, தனியாக கஷ்டப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகள், ஆதரவின்றி இறந்தவர்களை அடக்கம் செய்வது உள்ளிட்ட சேவைகளையும் செய்து வருகிறார். இப்படி எண்ணற்ற சேவைகளை செய்து சாதிப்பதோடு, மற்றவர்களிடத்தில் அன்பாக, அரவணைப்புடன் நடந்து கொள்வார்.
பறவைகளுக்கும் நண்பர்
எளிமையான மனிதர். மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். கலெக்டர் ஜெயசீலன், சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தினர். மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் உற்ற நண்பன் என்பதை காட்டும் வகையில், அங்குள்ள ஆலமரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பழம் தின்னி வவ்வால்களை காக்கும் பொருட்டு, அப்பகுதியில் வெடி வெடிக்க, மேளதாளங்கள் முழங்க, வாகனங்களில் அதிக சத்தம் எழுப்ப தடை விதித்தார் என்றால் இதைவிட சான்று வேறு என்ன இருக்க முடியும். எண்ணற்ற சாதனைக்கு சொந்தக்காரர் தற்போது விருதுநகரில் பணியாற்றி வருகிறார்.
அசோக்குமார், எஸ்.ஐ., கூறியதாவது: பணிபுரியும் இடத்தை எப்போதும் புனிதமாக கருத வேண்டும். அதுதான் எனது எண்ணம். போலீஸ் ஸ்டேஷன் என்றாலே பெரும்பாலும் வர தயக்கம் காட்டுவர். அந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் போன்று இல்லாமல் அலுவலகத்திற்கு வருவது போன்ற சூழலை ஏற்படுத்தினேன். மல்லாங்கிணரில் அத்திட்டத்தை துவக்கினேன். அதற்குப்பின் பணி மாறுதல் பெற்று, சென்ற இடங்களில் தொடர்ந்து மாற்றத்தை கொண்டு வர விரும்பினேன்.
பள்ளிகளில் விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசினேன். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து, பாராட்டு தெரிவித்தனர். காரியாபட்டியில் அதற்கான முழு முயற்சி எடுக்கப்பட்டு, மக்கள், சமூக ஆர்வலர்கள், நண்பர்கள் உடன் பணியாற்றும் போலீசார் பங்களிப்புடன் தென்னகத்தில் முதன்முதலாக ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெரும் அளவிற்கு மாற்றிக் காட்டினேன். அதற்கான பலன் கிடைத்தது. அப்போது இருந்த ஏ.எஸ்.பி., கருண்காரத் ஊக்குவித்தார். தரச் சான்றிதழ் பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
இளைஞர்களுக்கு அரசு தேர்வு எழுதுவதற்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து என்னால் முடிந்த தனிப்பட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறேன். கூட்டு முயற்சி இருந்தால் சாதிக்கலாம். அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி அரவணைப்புடன் செயல்பட்டதால் நட்புடன் பழகினர். குறிப்பாக குற்றங்கள் குறைய வேண்டும். அன்பால் திருத்த முடியும் என்பதே எனது நோக்கம், என்றார்.