ADDED : ஏப் 30, 2025 06:36 AM
காரியாபட்டி; காவிரி வைகை கிருதுமால் குண்டாறு நதிநீர் இணைப்பிற்கு நிதி ஒதுக்காததால் நரிக்குடி பகுதி விவசாயிகளிடையே  வேதனையை ஏற்படுத்தியது.
தென் மாவட்டங்களில்  விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் உயர,  குடிநீர்,  தொழில்கள்  என அனைத்திற்கும் பயன்படும் வகையில் காவிரி -வைகை கிருதுமால் -குண்டாறு நதி இணைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் 13 மாவட்டங்கள் பயன் பெறும். அதன் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டும்  பணி துவக்கப்பட்டு சில கி.மீ.,  தூரம் மட்டுமே நடந்தது. ஒதுக்கப்பட்ட நிதி சில கி.மீ.,  தூரத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
அதற்கு பின் நிதி ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அலுவலகம்,  அதிகாரிகள் தேவையான நிதி ஒதுக்கப்படும் என அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் தெரிவிக்கின்றனர். ஏற்றபின் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார் தெரிவித்தனர்.  அது போல தான் கடந்த தேர்தலின் போதும்  தி.மு.க , வும் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.
பல்வேறு சட்டசபை கூட்டம் தொடர் நடந்தும் இத் திட்டத்தை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.  விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.   ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்படும் என்கிற பதிலைத் தவிர வேறு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.  இந்த முறையாவது சட்டசபை கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.   நிதி ஒதுக்கப்படவில்லை.
இப்பகுதி விவசாயம்,  கால்நடை , நிலத்தடி நீர்மட்டம், தொழில்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. விவசாயம் கேள்விக்குறியானது.  விவசாயம் இன்றி விவசாய குடும்பங்கள் பல பாதிக்கப்பட்டு வருகின்றன.  அப்படி இருந்தும் இந்த முறையும் நிதி  ஒதுக்காதது,  நரிக்குடி பகுதி விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியது.

