/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, தெருவிளக்கு, வாறுகால், சுகாதாரவளாகம் இல்லை
/
ரோடு, தெருவிளக்கு, வாறுகால், சுகாதாரவளாகம் இல்லை
ADDED : ஜன 15, 2024 10:58 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள சேய் கிராமங்களில் முறையான ரோடு, தெருவிளக்கு, கழிவு நீர் வாறுகால், சுகாதார வளாகம், குளியல் தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் துலுக்கன்குளம், கங்கா குளம், அழகு தேவேந்திரபுரம், பாலசுப்பிரமணியபுரம், கன்னார்பட்டி, கன்னார்பட்டி காலனி, பெருமாள் தேவன் பட்டி, ராமகிருஷ்ணாபுரம் புதூர், வேப்பங்குளம் கோபாலபுரம், மொட்டமலை, ஸ்ரீபுரம், நரிக்குறவர் காலனி, காரங்குளம் என பல்வேறு சேய் கிராமங்கள் உள்ளது.
பெருமாள் தேவன் பட்டியில் இருந்து லட்சுமியாபுரம் செல்லும் பாதையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கும் போதெல்லாம் பஸ்கள் சரியான முறையில் வராமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
பிள்ளையார் குளத்தில் இருந்து கங்கா குளம் வழியாக வைத்தியலிங்கபுரத்திற்கு செல்லும் ரோட்டில் உள்ள காயல்குடி ஆற்றுப் பாலம் தரைப் பாலமாக இருப்பதால், மழை நாட்களில் மக்கள் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் சுகாதார வளாக வசதி இல்லை. பாரதிதாசன் நகர், திருமால் நகர் போன்ற புதிய குடியிருப்பு பகுதிகளில் ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதிகள் இல்லை. அங்குள்ள கால்நடை மருத்துவமனை கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பிள்ளையார்குளம் அக்ரஹாரம் ரோடு பல வருடங்களாக சேதமடைந்துள்ளது.
கண்ணார்பட்டி காலனி நுழைவு வாயிலில் பயணியர் நிழற்குடைகள் இல்லாததால் மக்கள் வெயிலுக்கும், மழைக்கும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேப்பங்குளத்தில் நீர்நிலை ஆக்கிரப்பு அதிகளவு இருப்பதை வருவாய்த்துறை அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகிறது. அங்குள்ள தெருக்களில் ரோடு , வாறுகால் வசதி இல்லை. ராமகிருஷ்ணாபுரம் புதூரில் இருந்து சென்னாக்குளம் செல்லும் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. துலுக்கன்குளம் பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.