/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவுநீர், குப்பைகளின் தேக்கமாக மாறிய திருத்தங்கல் செங்குளம் கண்மாய் துார்வார மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : பிப் 26, 2024 01:00 AM

சிவகாசி : கண்மாய் முழுவதுமே கழிவுநீர், குப்பை கொட்டப்பட்டதால் துர்நாற்றம் என திருத்தங்கல் செங்குளம் கண்மாய் அலங்கோலத்தில் காட்சி அளிக்கிறது.
திருத்தங்கலில் இருந்து செங்கமலநாச்சியார்புரம் செல்லும் ரோட்டில் நகரின் மையப் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள செங்குளம் கண்மாய் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு தேவைகளுக்கும் பயன்பட்டு வந்தது. கண்மாயில் குளிக்க, துணி துவைக்க என மக்கள் பல்வேறு புழக்கங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் நாளடைவில் கண்மாய் கழிவுநீர் தேக்கமாக மாறி விட்டது. இதனால் நகர் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கண்மாய் அருகிலுள்ள இந்திரா நகர், பாண்டியன் நகர் குடியிருப்புகளின் சாக்கடை கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுகள் அனைத்தும் செங்குளம் கண்மாயிலேயே கலக்கிறது. மேலும் நகரின் ஒட்டுமொத்த குப்பைகளும் இதில் கொட்டப்படுகிறது.
இதனால் கண்மாயில் உள்ள தண்ணீரின் நிறமே மாறி கலங்கலாக உள்ளது. இப்பகுதியை மக்கள் கடந்து சென்றாலே தாமாகவே மூக்கை பொத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும். அந்த அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கண்மாய் எதிரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் மூன்று மாத காலம் அளவிற்கு பூட்டிக்கொண்டு பணி செய்த காலமும் உண்டு. கண்மாய் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் போர்வெல் அமைத்து இருந்தனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் ஓரளவிற்கு உப்பாக இருந்தாலும் பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் தற்சமயம் போர்வெல்லில் இருந்து கிடைக்கும் தண்ணீர் கலங்கலாகவும் துர்நாற்றமாகவும் கிடைக்கின்றது.
தவிர கண்மாய் முழுவதுமே பெரும்பான்மையான பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. எனவே கண்மாயினை துார்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.