ADDED : நவ 28, 2025 08:00 AM
நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பள்ளிவாசலில் மந்திரிக்கச் சென்ற பெண்ணை, கத்தியால் குத்திய அஷ்ரத்தை போலீசார் கைது செய்து, வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் தடயங்களை அழித்ததாக பாதிக்கப்பட்ட குடும் பத்தினர் தீக்குளிக்க முயன்றனர்.
நரிக்குடியை சேர்ந்த அஞ்சலி 23, உடல்நிலை சரியில்லாததால் அங்கு உள்ள பள்ளிவாசலுக்கு ஒரு வாரத்திற்கு முன் மந்திரிக்க சென்றார். அப்போது அஷ்ரத் முகமது அஜிஸ் 29, அப்பெண்ணை கத்தியால் குத்தினார். நரிக்குடி போலீசார் அஷ்ரத் முகமது அஜிஸை கைது செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று பள்ளி வாசலை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். இதனை அறிந்த அந்த பெண் குடும்பத்தினர் அங்கு சென்று பல்வேறு தடயங்கள் உள்ளன. அதனை ஏன் அழித்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இன்று (வெள்ளி) தொழுகை நடத்தவே சுத்தம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என கூறி ஆத்திரமடைந்த பெண்ணின் மாமனார் தர்மர், உறவினர் மோகன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றினர்.

