/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பீக் அவரில் பாதாள சாக்கடை பணிகள்
/
பீக் அவரில் பாதாள சாக்கடை பணிகள்
ADDED : பிப் 17, 2024 04:30 AM

விருதுநகர்: விருதுநகரில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் பீக் அவரில் பாதாளசாக்கடை பணிகள் நடப்பதால் கடும் நெருக்கடியில் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
விருதுநகரில் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இந்நேரங்களில் ராமமூர்த்தி ரோடு, மல்லாங்கிணர் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, கிருஷ்ணாமாச்சாரி ரோடு, பாத்திமா நகர் ஆகிய பகுதிகளில் அதிகளவு நெருக்கடி இருக்கும்.
விருதுநகர் நகராட்சிக்கு இன்றளவும் தீராத பெரும் பிரச்னையாக இருந்து வருவது பாதாளசாக்கடை தான். ராமமூர்த்தி ரோட்டில் மூன்று மாதங்கள் முன் பாதாளசாக்கடை கழிவுநீர் வெளியேறி ரோட்டின் அடியில் அரிப்பு ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் ரோட்டை தோண்டி குழாய்களை சீரமைத்தது.
இந்நிலையில் அதே பிரதான குழாயில், முன்பு தோண்டப்பட்ட இடத்தில் 50 மீட்டர் தள்ளி அடுத்த மேன்ஹோல் நிரம்பி வழிந்தது. நேற்று காலை பீக் அவரில் இதை சரி செய்ய நகராட்சி ஊழியர்கள் வந்தனர். வந்த வேகத்தில் பணிகளை துவக்கி பேரிகார்டுகளை அமைத்தனர்.
இதனால் பாதிக்கு மேல் ரோடு அடைபட்டதால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றன. இது போன்ற பாதாளசாக்கடை மீட்பு பணிகள் அவசரம் என்றால் உடனடியாகவும், பாதகம் இல்லாத பணிகளை பீக் அவர் முடிந்த பின் பார்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.