ADDED : நவ 24, 2025 09:25 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அதிக பாரங்களை ஏற்றி கொண்டு கனரக வாகனங்களும், கண்ட இடத்தில் நிற்கும் மினி பஸ்களாலும் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுவதால் நகரில் டிராபிக் போலீஸ் பிரிவு இருந்தும் பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை குறுகலான ரோடுகளை கொண்டது. ஆக்கிரமிப்புகளாலும் ரோடு சுருங்கி விட்டது. இதில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. நகரில் 5 க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயங்குகின்றன. இவைகள் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் நினைத்த இடத்தில் நிறுத்தி ஏற்றுவதால் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுகிறது. நகரில் அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.
காந்திநகர் சந்திப்பில் தினமும் 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கட்டுமான பொருட்களை திறந்த வெளியில் ஏற்றி செல்வதால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு ஆத்திபட்டி பகுதியில் சைக்கிள் வந்தவர் மீது கனரக வாகனம் மோதி ஒருவர் பலியானார். 5 நாட்களுக்கு முன்பு, கற்கள் ஏற்றி வந்த லாரி காந்திநகர் சந்திப்பில் டயர் பஞ்சர் ஆகி நின்றது. காந்தி நகர் சர்வீஸ் ரோட்டில் இளைஞர்கள் பைக்கில் அதிவேகத்தில் செல்வதுடன் வீலிங் செய்கின்றனர்.
இவற்றை எதையும் கண்டு கொள்ளாமல் நகர போக்குவரத்து பிரிவு போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கனரக வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்லவும், மினி பஸ்களை உரிய ஸ்டாப்புகளை நிறுத்தி செல்லவும், அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டி செல்லும் இளைஞர்களை எச்சரிப்பது உள்ளிட்ட எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை. நாளுக்கு நாள் இது போன்ற பிரச்னைகள் கூடிக்கொண்டே செல்கிறது. மாவட்ட போலீஸ் நிர்வாகம் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

