/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படுமோசமான ரோடு, சுத்தம் செய்யப்படாத வாறுகால்
/
படுமோசமான ரோடு, சுத்தம் செய்யப்படாத வாறுகால்
ADDED : ஜன 22, 2025 09:27 AM

சாத்துார் : குண்டும் குழியுமான ரோடு, சுத்தம் செய்யப்படாத வாறுகாலால் சாத்துார் அண்ணா நகர் குடியிருப்போர் அவதியடைந்து வருகின்றனர்.
சாத்துார் அண்ணா நகர் குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் வேல்முருகன், செல்வக்குமார், பொன்ராஜ், மாரிக் கண்ணன், சுரேஷ், முனிஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடியதாவது; அண்ணா நகரில் பாதாள சாக்கடை திட்டம் ,புதிய கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக ஏற்கனவே பதிக்கப்பட்டு இருந்த பேவர் பிளாக் ரோடு தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன . இதனால் அனைத்து தெருக்களும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
தற்போது பணிகள் முடிவடைந்து மெயின் தெரு ஒரு சில குறுக்கு தெருக்கள் மட்டும் மீண்டும் பேவர்பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. மெயின் தெருவில் பதிக்கப்பட்ட பேவர்பிளாக்கல் முறையாக பதிக்கப்படாததால் தற்போது பெய்த மழையில் மண்ணுக்குள் புதைந்து மேடும் பள்ளமாக காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் மேடு பள்ளமான ரோட்டில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.
அண்ணா நகர் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ள தெருவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதாள சாக்கடை குழாய் இணைக்கும் பணி முடிவடைந்து விட்ட நிலையில் இந்தப் பகுதியில் ரோடு போடப்படவில்லை. தற்போது சிறிய மழை பெய்தாலும் இந்த தெரு முழுவதும் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஊறுகாய் கம்பெனி தெருவிலும் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்படவில்லை. இங்கு மழை நீர் தேங்கி நிற்பதால் பாதையும் முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளது. வெம்பக்கோட்டை ரோட்டில் தற்போது திடீரென பாலம் கட்டுவதற்காக ரோட்டை தோண்டி உள்ளனர். இவ்வழியாக காலை மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் டவுன் பஸ்கள் அதிக அளவில் சென்று வருகின்றன தற்போது ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருப்பதால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
மேலும் அண்ணா நகரில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரிபவர்களும் மக்களும் பயன்படுத்தி வந்த பொது சுகாதார வளாகம் பல மாதமாக மூடி கிடக்கிறது. இதனை உடனடியாக சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அண்ணா நகர், பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் பெற்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்,முதியவர்கள் பயன்பெறும் வகையில் ஊர் புற நுாலகம் ஒன்று கட்டித்தர வேண்டும்.
அண்ணா நகரில் ரோடு விரிவாக்க பணியின் போது சாலை ஓரத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. மீண்டும் கட்டித்தரப்படவில்லை. இதனால் மக்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் ரோடு ஒரம்காத்திருந்து பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.
அண்ணா நகரில் உள்ள வாறுகாலில் அதிகளவு குப்பை கொட்டப்படுகிறது. இதனை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கலந்துரையாடினர்.