ADDED : அக் 26, 2025 06:46 AM

சிவகாசி: சிவகாசி அருகே வெள்ளூர் ஊராட்சியில் மூன்று மாதமாக குடிநீர் வினியோகம் செய்யாத நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தற்காலிகமாக தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் குழாய் அமைக்கும் பணி நடந்தது.
சிவகாசி அருகே வெள்ளூர் ஊராட்சி ஆதிதிராவிடர் கிழக்கு பகுதி, குமாரபுரம், அம்மன் கோவில்பட்டி கிழக்கு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு உள்ளூரிலுள்ள கிணற்றிலிருந்து போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டது. தற்போது உள்ளூர் போர்வல் மூலமும் குடிநீர் வினியோகம் இல்லாத நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழும் மூன்று மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
இதனால் இப்பகுதியில் குடிநீரை விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் குழாய் புதிதாக பதிக்கப்படும் பணியும் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

