/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஷட்டர் பழுதால் வீணாகும் தண்ணீர்
/
ஷட்டர் பழுதால் வீணாகும் தண்ணீர்
ADDED : ஜன 07, 2024 03:54 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் கண்மாய் ஷட்டர் பழுதடைந்து சேதமாகி உள்ளது. இதன் வழியாக கண்மாய் நீர் வெளியேறுகிறது.
செங்குன்றாபுரத்தின் கண்மாய்க்கு அப்பகுதியின் மேலக்கண்மாய், மூளிப்பட்டி தொந்தி ஒடையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்தாண்டு தொடர் கனமழை காரணமாக 5 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் நிறைந்து நீர் மறுகால் பாய்ந்தது. இதன் மூலம் சுற்றியுள்ள 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்நிலையில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளாததால் பலவீனமான பகுதிகளில் உடைப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் மதகுகள், ஷட்டர்கள், நீர்வரத்து ஒடைகளுக்கான மடைகளை புனரமைப்பு செய்யவில்லை.
சேதமான பகுதிகள் வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால் கண்மாயின் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இப்பகுதியில் நெல், வாழை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில மாதங்கள் தண்ணீரின் தேவை உள்ளது.
ஆனால் சேதமான ஷட்டர்கள், மதகுகள் வழியாக வெளியேறுவது கவலை அளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே அதிகாரிகள் கண்மாய் கரை, ஷட்டர்கள், மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.