/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போட்டியாளர்களை அரசு அதிகாரிகளாக மாற்றுகிறோம்
/
போட்டியாளர்களை அரசு அதிகாரிகளாக மாற்றுகிறோம்
ADDED : பிப் 16, 2024 04:51 AM

விருதுநகர்: l வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் செயல்பாடுகள்
விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் வேலை வாய்ப்பு பதிவு, பதிவு புதுப்பித்தல், காலியிடங்களுக்கு பதிவு தாரர்களை பரிந்துரைத்தல், போட்டித்தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு இலவசமாக கையெடுகள், மாதிரித்தேர்வுகள், நேர்காணல்கள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவுதாரர்கள் தங்கள் வேலை வாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அப்படி புதுப்பிக்க தவறியர்களுக்கு 18 மாதம் புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது.
l மத்திய அரசு பணிகளுக்காக வழங்கப்படும் பயிற்சிகள்
ரயில்வே, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஜி.டி., தேர்வுகள், வங்கிகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 100 நாள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இவர்களுக்கு மாதிரித்தேர்வுகள், நேர்காணல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
l தமிழக அரசு பணியிடங்களுக்கான பயிற்சிகள்
தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் குரூப் -2, குரூப் -4, போலீஸ் எஸ்.ஐ., இரண்டாம் நிலை போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள், மாதிரித்தேர்வு, நேர்காணல் பயிற்சிகளும் அளிக்கபடுகிறது. மேலும் இரண்டாம் நிலை போலீஸ் கான்ஸ்டபிளுக்கு 57 பேர் பயிற்சி பெற்றனர். இவர்கள் உடற்தகுதி தேர்வுக்கு ஆயுதப்படை மைதானத்தில் ரோப் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டதில் 38 பேர் எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றனர்.
l வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு அரசு பணி கிடைக்கிறதா
அரசு வேலைகளில் முன்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. தற்போது அனைத்து அரசு வேலை பணிகளும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. அரசு அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு பதிவு பின்பற்றப்படுகிறது. மேலும் தகுதியான நபர்கள் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெற்றவர்களின் பட்டியல், வெளியில் இருந்து விண்ணப்பித்தவர்களின் பட்டியல் என இரண்டையும் ஆராய்ந்து தகுதியான நபர்களை தேர்வு செய்து பணிகளை வழங்குகின்றனர்.
l வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் பயன்பெற்றவர்கள்
ஒவ்வொரு மாதமும் 2, 3 ம் வெள்ளி கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள 20 முதல் 25 வரை உள்ள தனியார் கம்பெனிகள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 2023 ஆக. 26., அக். 28 என இரண்டு நாட்கள் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் ராயல் என்பீல்டு, டி.வி.எஸ்., எச்.சி.எல்.,போஸ்ச்., ராம்கோ, ஜான்சன் லிப்ட்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்த இரண்டு முகாம்களிலும் 8 வகுப்பு முதல் தொழிற்கல்வி, இளங்கலைப்பட்டம் பயின்ற இளைஞர்கள் மொத்தம் 4270 பேர் பங்கேற்றனர். இதில் 676 பேர் தேர்வாகி பணிநியமன ஆணையினை பெற்றனர். மேலும் 672 பேர் இறுதி நேர்காணலுக்கு தகுதி பெற்றனர்.
l வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஊதவித் தொகை
5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பதிவுதார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, மேல்நிலை கல்வி முடித்தவர்களுக்கு ரூ. 400, இளங்கலை, அறிவியல் முடித்தவர்கள் ரூ. 600 என வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி இளைஞர்கள் படித்து முடித்து பதிவு செய்த ஒராண்டிற்கு பின் ஊதவித்தொகையாக எஸ்.எஸ்.எல்.சி., ரூ 600, மேல்நிலை முடித்தவர்கள் ரூ. 750, இளங்கலை, அறிவியல் முடித்தவர்கள் ரூ. 1000 என மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
l உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் ஊதவித்தொகை பெறுவதற்கு அரசின் வேறு எந்த ஊதவித்தொகையும் பெறாமலும், எவ்வித வேலையில் இல்லாமல் இருக்க வேண்டும். இவர்களின் வங்கி விபரங்கள், தொழிலாளர் வைப்புத்தொகை விபரங்கள், ஆதார், ஸ்மார்ட் கார்டு விபரங்களை பெற்று சோதித்து ஊதவித்தொகை வழங்கப்படுகிறது. ஊதவித்தொகை பெறுவதற்கு பிற வகுப்பினருக்கு வயது 40, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயது உச்சவரம்பாக உள்ளது.
l தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்
தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இதற்காக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணை யதளத்தில் நிறுவனத்தின் லோகோ, ஜி.எஸ்.டி., பான் நம்பர் பதிவு செய்ய வேண்டும். வேலை வாய்ப்பு இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் அளித்த பின் மாவட்டங்கள் தோறும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மூலம் தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
l போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு அளித்துள்ள வசதிகள்
மாவட்டத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு தேவையான மாதிரி வினா-விடைகள், கடந்த 10 ஆண்டுகளாக தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்பு, போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் என அனைத்தையும் பெற முடியும். மேலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நுாலகம், இலவச இணையதள சேவை, 26 கணினிகள் உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு அடை யாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற போட்டியாளர்கள் 2023 ஏப். 4 முதல் 2024 ஜன. 31 வரை 113 பேர் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு சென்றுள்ளனர்.
l போட்டித்தேர்வுக்காக வழங்கப்படும் இணைய வழிப்பயிற்சிகள்
டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., டெட்., உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக TN Career Services Employment என்ற யூடியூப் சேனல் செயல்படுகிறது. இதில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் வகுப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் http://pme/vnrstudycircle என்ற டெலிகிராம் லிங்கில் தேவையான பயிற்சி கையெடுகள் வழங்கப்படுகிறது.