/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு தேர்தல் வாக்குறுதி என்னாச்சு
/
எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு தேர்தல் வாக்குறுதி என்னாச்சு
எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு தேர்தல் வாக்குறுதி என்னாச்சு
எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு தேர்தல் வாக்குறுதி என்னாச்சு
ADDED : அக் 30, 2025 03:32 AM
விருதுநகர்: 20 ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி வழங்கி 4 ஆண்டுகளை கடந்தும் இதுவரை அறிவிப்புகள் வெளியிடப்படாததால் போலீசார் விரக்தியடைந்துள்ளனர்.
தமிழக போலீஸ் துறையில் பணியில் கான்ஸ்டபிளாக சேருபவர்கள் முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் முதல் நிலை கான்ஸ்டபிளாகவும், அடுத்து 5 ஆண்டுகள் பணிபுரிந்து தலைமை கான்ஸ்டபிளாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.
மேலும் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் எஸ்.எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு பெறுகின்றனர். இம்முறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேரும் பெரும்பாலானோர் எஸ்.எஸ்.ஐ., ஆக மட்டுமே பணி ஓய்வு பெறுகின்றனர். இதில் வயது குறைவாக பணியில் சேரும் சிலர் மட்டுமே எஸ்.ஐ.,ஆகவும், மிகவும் அரிதாக சிலர் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றும் ஓய்வு பெறுகின்றனர்.
இம்முறையில் மாற்றம் செய்வதற்காக 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் எஸ்.எஸ்.ஐ.,ஆகவும், முதல் 7 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் முதல் நிலை கான்ஸ்டபிளாகவும் பதவி உயர்வு வழங்கப்படும் என தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை கடந்தும், அடுத்த சட்டசபை தேர்தலும் வரப்போகும் நிலையிலும் இதுவரை 20 ஆண்டுகள் பணிபுரிந்தால் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு, 7 ஆண்டுகள் பணிபுரிந்தால் முதல் நிலை கான்ஸ்டபிள் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக 25 ஆண்டுகள் என்பதை 22 ஆண்டுகளாகவும், 15 ஆண்டுகள் பணிபுரிந்தால் தலைமை கான்ஸ்டபிள் என்பதை 13 ஆண்டுகளாகவும் மாற்றி சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதி அளித்தது ஒன்றும், அறிவித்தது ஒன்றாகவும் இருப்பதால் போலீஸ் துறையில் சீர்திருத்தங்கள் நடக்கும் என நம்பி வாக்களித்த போலீஸ் குடும்பத்தினர் விரக்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

