/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
''மழையால் பாதித்த நெல் பயிருக்கு நிவாரணம் எப்போது கிடைக்கும்''
/
''மழையால் பாதித்த நெல் பயிருக்கு நிவாரணம் எப்போது கிடைக்கும்''
''மழையால் பாதித்த நெல் பயிருக்கு நிவாரணம் எப்போது கிடைக்கும்''
''மழையால் பாதித்த நெல் பயிருக்கு நிவாரணம் எப்போது கிடைக்கும்''
ADDED : ஏப் 25, 2025 05:57 AM
அருப்புக்கோட்டை: பாதிப்பு அடைந்த நெல் பயிருக்கு உரிய நிவாரணம் வந்து சேரவில்லை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., கனகராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
கோபாலகிருஷ்ணன், நரிக்குடி: எங்கள் பகுதியில் நெல் விளைச்சல் பருவம் கடந்த மழையால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்.
சுப்புராஜ், இன்சூரன்ஸ் அதிகாரி: இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு பாதிப்பு குறித்து பரிந்துரை செய்து உள்ளோம். விரைவில் கிடைக்கும்.
லட்சுமண பெருமாள், வடபாலை: எனது தோட்டத்தில் 2 லட்சம் வரை செலவு செய்து வாழை பயிரிட்டு நன்கு வளர்ந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இடி மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து அனைத்தும் கருகிவிட்டது. இதற்கு உரிய இழப்பீடு அரசு தர வேண்டும்.
ராம்பாண்டியன், விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்: அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள கோபாலபுரம், மலைப்பட்டி, பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி கடத்தியுள்ளனர். இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கலெக்டர் தலைமையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும். பாலையம்பட்டி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக செல்லும் கால்வாயை தூர்வாரி கால்வாய் இருபுறமும் சிமெண்ட் தடுப்புச் சுவர் அமைத்து மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.
கூட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி தாசில்தார்கள் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலை, மின்சாரம், வனத்துறை, நீர்ப்பாசனம், விவசாயம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

