ADDED : மே 27, 2025 12:35 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கி வெப்பம் குறைந்துள்ள நிலையில், நேற்று காலை முதல் இரவு வரை விட்டு துாறலாக பரவலான மழை பெய்தது.
மாவட்டத்தில் காலை 6:00 மணி முதலே மழை பெய்ய துவங்கியது. காலை முதல் பகல் நேரங்களிலும் விட்டு விட்டு துாறலாக மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் வானிலை மேகமூட்டத்துடனே காணப்பட்டதால் வெப்பம் தணிந்தது. ஆனால் மார்க்கெட்டிங், டெலிவரி போன்ற பணியில் ஈடுபட்டோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாலையும் அவ்வப்போது துாறல் பெய்தது. ஆங்காங்கே ரோடுகளின் பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, சாத்துார், காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு பரவலாக காணப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவித்திருந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு மேல் ஸ்ரீவில்லிபுத்துாரில் துவங்கிய சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது.
தாணிப்பாறை, பிளவக்கல் அணை, செண்பகத் தோப்பு பேச்சியம்மன் கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. நீரோடை பகுதிகளில் போலீசார், வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.