/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கையுறை, காலுறை இன்றி சுத்திகரிப்பு நிலையத்தில் துாய்மைப்பணி பாதுகாப்பு உபகரணங்களின் நிலை என்னாச்சு
/
கையுறை, காலுறை இன்றி சுத்திகரிப்பு நிலையத்தில் துாய்மைப்பணி பாதுகாப்பு உபகரணங்களின் நிலை என்னாச்சு
கையுறை, காலுறை இன்றி சுத்திகரிப்பு நிலையத்தில் துாய்மைப்பணி பாதுகாப்பு உபகரணங்களின் நிலை என்னாச்சு
கையுறை, காலுறை இன்றி சுத்திகரிப்பு நிலையத்தில் துாய்மைப்பணி பாதுகாப்பு உபகரணங்களின் நிலை என்னாச்சு
ADDED : மே 22, 2025 12:27 AM

விருதுநகர்: விருதுநகரில் கையுறை, காலுறை போன்ற எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பாதாளசாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் துாய்மை பணியாளர்களை பணிபுரிய வைத்த நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.
விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு 36 வார்டுகளின் பாதாளசாக்கடை இணைப்புகளின் கழிவுகளும் வருகிறது. இங்கு சுத்திகரித்து கவுசிகா நதியில் தண்ணீர் வெளியிடப்படுகிறது. இதில் முறையாக சுத்திகரிப்பு நடப்பதில்லை என குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இரண்டு நாட்கள் முன் திருப்பூர் மாவட்டத்தில் சாய ஆலையில் ஏழு அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மூவர் இறந்துள்ளனர். செப்டிக் டேங்க் மரணத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்திருந்தார். இது தொடர்கதையாக உள்ள சூழலில், விருதுநகரில் துாய்மை பணிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதே கிடையாது.
நேற்று அல்லம்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டிகளில் அடைபட்ட மண்ணை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் கையுறை, காலுறை எதுவுமின்றி வெறுங்கால், கைகள் கொண்டு சுத்தம் செய்தனர். மண்வெட்டியை வைத்து பாதாளசாக்கடை மண் கழிவுகளை அகற்றினர்.
இவ்வாறு துாய்மை பணியாளர்களை வேலை வாங்கிய நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆண்டுதோறும் வாங்கும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான நிதி வீண் தானா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறியதாவது: சமீபத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் இறந்துள்ள நிலையில், நகராட்சி நிர்வாகமே கழிவுநீர் தொட்டியில் ஆட்களை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இறக்கி விடுவது வெட்க கேடானது. ஆண்டுதோறும் வாங்கும் உபகரணங்களை என்ன செய்கின்றனர் என தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விருதுநகர் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.