மாஜி அமைச்சர் மகன் மீது மேலும் ஒரு வழக்கு: 7 பேர் கைது
மாஜி அமைச்சர் மகன் மீது மேலும் ஒரு வழக்கு: 7 பேர் கைது
ADDED : அக் 07, 2011 09:47 PM
சேலம் : சேலம், ஐந்து ரோட்டில் உள்ள, 'அக்ரோ' கூட்டுறவு சங்க நிலத்தை, கூட்டு மோசடி செய்து விற்பனை செய்ததாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ந்த வழக்கில், முன்னாள் அமைச்சரின் உதவியாளர்கள், துணை மேயர் பன்னீர்செல்வம் உட்பட ஏழு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் ஐந்து ரோட்டில், 'அக்ரோ' கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இந்தச் சங்கத்துக்குச் சொந்தமாக, அரியானூரில், 77 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரித்ததாக, 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா தலைமையில், கூட்டுச் சதித் திட்டம் தீட்டியது, கலகம் விளைவித்தல், பயங்கர ஆயுதத்துடன் கலகம் விளைவிக்க முயற்சித்தல், கொலை முயற்சியில் ஈடுபடுதல், கொடுமையான ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயற்சித்தல், கடத்திய பொருளை மறைத்து வைத்தல், அடிமை போல் நடத்துதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல், ஏமாற்று வேலைகளில் ஈடுபடுதல், பொதுச் சொத்தை ஊழல் செய்தல் ஆகிய, 10 பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சரின் உதவியாளர்கள் கவுசிக பூபதி, செங்கோட்டையன், துணை மேயர் பன்னீர்செல்வம், முன்னாள் இன்ஸ்பெக்டர் லெட்சுமணன். கவுன்சிலர் ஜிம்மு ராமு, மாநகராட்சி 33வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் வேட்பாளர் அருள், தனி அதிகாரி செல்வராஜ் ஆகியோரை, போலீசார் கைது செய்து, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல், நீதிபதி சரத்ராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
விசாரணை நடத்திய நீதிபதி, இவர்களை, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பாரப்பட்டி சுரேஷ்குமார், சேலம் சிறையில் உள்ளதால், அவரின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா உட்பட, மேலும் எட்டுப் பேர், எந்நேரமும் கைது செய்யப்படலாம் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கு விபரம் : 'அக்ரோ' கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தால், சங்கத்துக்கு எந்தப் பயனும் இல்லை எனக் கூறி, 2009 செப்டம்பர் 13ல், சங்க உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானத்தைத் தொடர்ந்து, செப்.,16ல், அந்த இடம் ஏலம் விடப்பட்டது. 4 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை, முன்னாள் எம்.எல்.ஏ.,வின் பினாமியான, ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டியைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கு, கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்த நில மோசடி குறித்து, பொன் பழனிச்சாமி தலைமையில் நான்கு பேர், போலீசில் புகார் தெரிவித்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிரச்னைக்குரிய அந்த நிலத்தை வாங்கிய காமராஜ், மீண்டும் அந்த நிலத்தை 'அக்ரோ' கூட்டுறவு சேவா சங்கத்தின், தனி அதிகாரி செல்வராஜுக்கு மீண்டும் கிரையம் செய்து கொடுத்தார்.
பொன் பழனிச்சாமி, சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணை நடத்திய நீதிபதி சரத்ராஜ், புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி, சேலம் மாநகர நில அபகரிப்பு மீட்புக் குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, அவரின் மனைவி சாந்தி, பிருந்தா செழியன், பாரப்பட்டி சுரேஷ்குமார், முன்னாள் அமைச்சரின் உதவியாளர்கள் சேகர், கவுசிக பூபதி, செங்கோட்டையன், சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டர் லெட்சுமணன், துணை மேயர் பன்னீர்செல்வம், கவுன்சிலர் ஜிம் ராமு, அம்மாபேட்டை அருள், சங்கத்தின் சிறப்பு அதிகாரி செல்வராஜ் உட்பட, 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

