உள்ளாட்சித் தேர்தலில் பதவியை ஏலமிட்ட 37 பேர் கைது : தேர்தல் கமிஷனர் அய்யர் தகவல்
உள்ளாட்சித் தேர்தலில் பதவியை ஏலமிட்ட 37 பேர் கைது : தேர்தல் கமிஷனர் அய்யர் தகவல்
ADDED : அக் 07, 2011 09:24 PM

மதுரை : ''உள்ளாட்சித் தேர்தலில், பதவியை ஏலம் விட்ட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என, மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் கூறினார்.
தென் மண்டல அளவிலான உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மதுரையில் நேற்று நடந்தது. 9 மாவட்ட கலெக்டர்கள், டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் கமிஷனர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில், பதவியை ஏலமிட்ட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏலமிடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடந்த தேர்தலை விட, இம்முறை 50 ஆயிரம் பேர் கூடுதலாக மனு தாக்கல் செய்தனர். தள்ளுபடி, வாபஸ் போன்றவை குறைவு. இறுதியாக, 32 ஆயிரம் பேர் கூடுதலாகக் களத்தில் நிற்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு குறித்து, போலீஸ் டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி.,யுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். தேவைப்பட்டால், மத்திய தொகுப்பில் இருந்து பெறும்படி கூறியுள்ளேன். ஓட்டுப்பதிவின் போது, யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்கள் 49 (ஓ) படிவத்திற்குப் பதிலாக, பிரிவு 71ன்கீழ் படிவம் பெற்று ஓட்டளிக்கலாம். இவ்வாறு, தேர்தல் கமிஷனர் கூறினார்.

