ADDED : ஆக 04, 2011 02:02 AM
தேனி : பக்கவாதத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக, மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய மருத்துவ கழகம் கம்பம் பள்ளத்தாக்கு கிளை சார்பில், தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம் தேனியில் நடந்தது. சங்க தலைவர் டாக்டர் ராஜவேல் தலைமை வகித்தார்.
செயலாளர் டாக்டர் கேசவன் முன்னிலை வகித்தார். 'பக்கவாதத்தில் ரத்த உறைதலை தடுக்கும் மருந்துகளின் பங்கு' குறித்து, பெரியகுளம் நரம்பியல் சிறப்பு நிபுணர் டாக்டர் சுதன்வாராவ் பேசியதாவது: ஊனம் நிலைத்து விடும் தன்மையுள்ள நோய்களில், முதல் இடத்தையும், இறப்பை ஏற்படுத்துவதில் மூன்றாம் இடத்தையும் பக்கவாதம் பிடித்துள்ளது. இந்தியாவில் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 12 சதவீதம் பேர் 40 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வராமல் தடுப்பது, அதன் பக்க விளைவுகளை குறைப்பதாகத்தான் சிகிச்சைகள் உள்ளன. 'த்ரோம்பாலிசிஸ்' என்ற புதிய சிகிச்சை முறையில், நூற்றுக்கு 33 பேரை முற்றிலும் குணப்படுத்தவோ, அல்லது இறப்பில் இருந்து மீட்கவோ முடியும். இம்முறையிலான சிகிச்சையை நோய் கண்ட நான்கரை மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். 1995ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய சிகிச்சை முறை இந்தியாவில் இன்னும் சரியாக பயன்படுத்தப்படவில்லை, என்றார்.

