UPDATED : ஏப் 23, 2024 11:38 PM
ADDED : ஏப் 23, 2024 11:35 PM

கோவில்பட்டி : தமிழகத்தில் சில தினங்களாக, போலீசார், அரசு பஸ் டிரைவர், நிருபர், பொதுமக்கள் என பல தரப்பினரையும் கஞ்சா போதை கும்பல் தாக்கிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராகச் செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில், நள்ளிரவில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சிலர் கேரளா, ஆந்திராவுக்கு கடத்தும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வருகிறது.
3.5 லட்சம் கிலோ
குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ரேஷன் அரிசி கடத்தல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இந்த கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் மாதம் தவறாமல், 'கவனிக்கப்பட்டு' வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மட்டும், மாதம் 350 டன், அதாவது 3.5 லட்சம் கிலோ அளவிற்கு ரேஷன் அரிசி, வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
கடும் அதிர்ச்சி
இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், கோவில்பட்டி வழக்கறிஞர் ஒருவர் வீட்டில், நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு:
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ராஜிவ் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் மாரிசெல்வம், 30; வழக்கறிஞர். கோவில்பட்டியில் சில நாட்களுக்கு முன், ராஜிவ் நகரைச் சேர்ந்த ஒரு சிறுவன் வீடு வீடாக சென்று, ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி உள்ளார்.
தகராறு
தொடர்ந்து, அந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் கட்டாயப்படுத்தி, வீடுகளுக்கு சென்று ரேஷன் அரிசியை வாங்குமாறு கூறியுள்ளது. அதற்கு மறுத்த சிறுவனை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கி உள்ளார்.
இது குறித்து, வழக்கறிஞர் மாரிசெல்வம், அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, மாரிசெல்வத்துக்கும், கார்த்திக்கிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனத்தை, விருதுநகர் அருகே போலீசார் பிடித்தனர். அதற்கு மாரிசெல்வம் தான் காரணம் என, கார்த்திக் மற்றும் நண்பர்கள் கோபம் அடைந்தனர்.
நேற்று அதிகாலை 2:00 மணி அளவில், மாரிசெல்வத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்ட கார்த்திக், அவரை மிரட்டி உள்ளார். தொடர்ந்து, கார்த்திக் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர், கார் மற்றும் டூ - வீலர்களில், மாரிசெல்வம் வீட்டிற்கு சென்று கதவை தட்டிஉள்ளனர்.கதவை திறந்து மாரிசெல்வம் வெளியே வந்த போது, அந்த கும்பல்
சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடியது. மாரிசெல்வம் வீட்டின் முன் பகுதியில், கிரில் கம்பிகள் வழியாக பெட்ரோல் குண்டுகள் வீட்டிற்குள் விழுந்தன.அங்கிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. மாரிசெல்வம் வீட்டின் அருகே பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் நிறுத்தியிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் சேதப்படுத்தி சென்றது.
இது தவிர, ஊத்துப்பட்டி சாலையில் ஒரு தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாரிசெல்வம் வாகனத்திற்கும், அந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தது.
கோவில்பட்டி மேற்கு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த தடயங்கள், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மாரிசெல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர், கார்த்திக்கின் உறவினர்களான வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கண்ணகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், சண்முகராஜ் என்பவர் வீட்டை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவை குறித்தும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் இந்த அராஜகம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் சென்னையில் கஞ்சா போதை வாலிபர்கள் தங்களை பிடிக்க வந்த போலீசாரை தாக்கியது, கும்பகோணத்தில் அரசு பஸ் டிரைவரை கஞ்சா போதையில் வாலிபர்கள் தாக்கியது; அதை படம் பிடித்த நிருபரை அடித்தது, பொதுமக்களை மிரட்டியது போன்ற வீடியோக்கள் தமிழகத்தில் சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
இதற்கிடையே, ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் குண்டு வீசி தாக்குதல் நடத்தும் அளவிற்கு இறங்கி இருப்பது, சட்டம் - ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
வழக்கறிஞர் மாரிசெல்வம் கூறியதாவது:கார்த்திக், பொன்ராஜ், நாகு, கயத்தாரை சேர்ந்த காங்., நிர்வாகிகள் உள்பட, 30 பேர், என் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். விருதுநகர், ஏழாயிரம்பண்ணை, கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துகின்றனர்.சிறுவர்கள் சிலரை மிரட்டி அவர்கள் வாயிலாக ரேஷன் அரிசியை மக்களிடம் இருந்து வாங்குகின்றனர். அரிசி வாங்க மறுத்த என் உறவினர் ஒருவரை, கார்த்திக் குழுவினர் தாக்கினர். இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பினேன்.
கார்த்திக் உள்ளிட்ட, 30 பேர் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது, 'ஏன் வந்தீர்கள்?' என கேட்டுக் கொண்டிருக்கும் போதே பத்து பெட்ரோல் குண்டுகளை வீசினர்; அரிவாளுடன் பாய்ந்து வந்தனர்.
திருநெல்வேலியை சேர்ந்த பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் உதவியுடன், ரேஷன் அரிசியை கடத்துகின்றனர்.
காவல் துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் 20 டன் வரை கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
@Image@ 3 கார்கள்; 10 வீடுகள்
கோவில்பட்டியில் உள்ள ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு பெரிய 'நெட்வொர்க்' உள்ளது.
மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில், மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் ரேஷன் அரிசியை இவர்கள், கிலோ 5 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர்.
உணவு வழங்கல் துறை அதிகாரிகள் சிலரை, தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டுள்ள இவர்கள், ரேஷன் கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாகவும் அரிசியை வாங்குகின்றனர். அவற்றை ரகசியமாக ஒரு இடத்தில் சேகரித்து வைத்து, காவல் துறை உதவியுடன் கடத்தி செல்கின்றனர்.
'இரண்டு ஆண்டுகளுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு தற்போது மூன்று கார்கள், 10 வீடுகள் உள்ளன' என, போலீசாரே கூறுகின்றனர்.

