விசாரணை கமிஷன் நியமனம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்
விசாரணை கமிஷன் நியமனம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்
ADDED : ஜூன் 21, 2024 01:04 AM
சென்னை:கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்; மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு, தலா 50,000 ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில், மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால், 40 பேர் இறந்த செய்தி கேட்டு, மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விஷ சாராயம் தயாரிக்க, மெத்தனாலை வழங்கியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட போலீஸ் அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேல் நடவடிக்கைக்காக, சி.பி.சி.ஐ.டி., வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடனடியாக சில நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மெத்தனால் கலந்த சாராய உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து, கைப்பற்றி அழிக்க வேண்டும்
மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை வழங்க வேண்டும்
உள்துறை செயலர், டி.ஜி.பி., சம்பவம் குறித்து ஆய்வு செய்து, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை வழங்குவர்
சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, காரணிகளை கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
அது, தன் பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்.

