சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 10 பேர் கைது
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 10 பேர் கைது
ADDED : பிப் 26, 2025 02:13 AM
சென்னை:ஈ.வெ.ரா., குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிட கழத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பினர், நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு இருப்பதாக, உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, நீலாங்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், த.பெ.தி.க., சென்னை மாவட்ட செயலர் குமரன், 45, விருகம்பாக்கம் பகுதி துணைச் செயலர் சுரேஷ், 28 என்பதும், நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, ராயப்பேட்டை எஸ்.பி.எஸ்., தெருவில் உள்ள விடுதியில், பெட்ரோல் குண்டு தயாரித்து வைத்துள்ளதும் தெரியவந்தது.
விடுதியில் ஆய்வு செய்த அதிகாரிகள், 10 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகன, குமரன், சுரேஷ் உள்ளிட்ட 10பேரை கைது செய்தனர்.
கைதான குமரன் மீது, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட ஆறு வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர்.

